கட்டிட தொழிலாளி கொலையில் மகன் கைது குடித்து விட்டு தாயை சித்ரவதை செய்ததால் கொன்றதாக வாக்குமூலம்


கட்டிட தொழிலாளி கொலையில் மகன் கைது குடித்து விட்டு தாயை சித்ரவதை செய்ததால் கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 May 2017 4:15 AM IST (Updated: 24 May 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கட்டிட தொழிலாளி பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மகன் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்,

குடித்து விட்டு தினமும் தனது தாயை சித்ரவதை செய்ததால் பீர்பாட்டிலால் தலையில் தாக்கியதாகவும் இதில் அவர் இறந்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கட்டிட தொழிலாளி கொலை

திருப்பத்தூர் அருகே பூரிகமாணிமிட்டா கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். கடந்த 21 -ந் தேதி நள்ளிரவு பன்னீர்செல்வம் அவரது வீட்டின் வெளியே பீர்பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியபோது பன்னீர்செல்வத்திற்கு நள்ளிரவு போனில் அழைப்பு வந்தது, அதனால் அவர் வீட்டின் வெளியே சென்றார் என தெரிவித்தனர்.

மகன் கைது

அதைத் தொடர்ந்து பன்னீர்செல்வத்தின் செல்போன் அழைப்பை போலீசார் சோதனை செய்ததில், போன் அழைப்பு எதுவும் வரவில்லை என தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் பன்னீர்செல்வத்தின் 2-வது மகன் லிங்கேஸ்வரன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. லிங்கேஸ்வரன் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில், தந்தையை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக லிங்கேஸ்வரன் போலீசாருக்கு வாக்குமூலம் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

எனது தந்தை பன்னீர்செல்வம் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மது அருந்திவிட்டு எனது தாயை தெருவில் நின்று ஆபாசமாக திட்டுவார். சம்பவத்தன்றும் அதே போன்று திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் (லிங்கேஸ்வரன்) அவர் கையில் இருந்த பீர் பாட்டிலை பிடுங்கி அவரது தலையில் அடித்தேன். இதில் தந்தை பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டார். போலீசில் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக மர்ம நபர்கள் அழைத்து கொலை செய்துவிட்டார்கள் என நாடகமாடினேன்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து போலீசார் லிங்கேஸ்வரனை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் அவரது குடும்பத்தினர் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story