பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள்-நோட்டுகள் அனுப்பும் பணி மும்முரம்


பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள்-நோட்டுகள் அனுப்பும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 27 May 2017 3:52 AM IST (Updated: 27 May 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள்-நோட்டுகள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான விலையில்லா பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பாடப்புத்தகம் வழங்கப்பட்டதால் மாணவர்களுக்கு புத்தகசுமை அதிகமாக இருந்தது. மாணவர்களின் புத்தகசுமையை குறைக்க அரசு முடிவு எடுத்து, ஒரு ஆண்டுக்கு 3 பருவமாக புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது காலாண்டு தேர்வு வரை தேவையான புத்தகங்களை முதல் பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 2-ம் பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டுக்கு பின்னர் இறுதி ஆண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 3-ம் பருவபுத்தகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. அவ்வாறு அந்தந்த பருவத்திற்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை 1-ம் வகுப்பு முதல் 9-வது வகுப்பு வரை அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான முதல் பருவ பாடப்புத்தகங்கள் மாவட்ட கல்வித்துறை சார்பில் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை கல்வி மாவட்டத்தில் உள்ள 84 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தேவையான முதல் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள் தஞ்சை மேம்பாலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பாடப்புத்தகங்களும், நோட்டுகளும் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தவுடன் அன்றே மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

அதிகாரி கருத்து

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஏற்கனவே 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான முதல் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தொகுதி-1, தொகுதி-2 ஆகிய 2 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது தமிழ், ஆங்கிலப்பாடங்கள் அடங்கிய புத்தகம் தொகுதி-1 ஆகும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்கள் அடங்கிய புத்தகம் தொகுதி-2 ஆகும். 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தொகுதி-1, தொகுதி-2, தொகுதி-3 என 3 பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது தமிழ், ஆங்கிலப்பாடங்கள் அடங்கியது தொகுதி-1 ஆகும். கணக்குபாடம் மட்டும் அடங்கியது தொகுதி-2 ஆகும். அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் அடங்கியது தொகுதி-3 ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story