கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,800 கனஅடியாக அதிகரிப்பு


கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,800 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 May 2017 4:30 AM IST (Updated: 28 May 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,800 கனஅடியாக அதிகரித்தது. அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது.

பென்னாகரம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆண்கள் குளிக்கும் அருவி, சினிபால்ஸ், பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை வினாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,800 கன அடியாக உயர்ந்தது.

பரிசலில் சென்று மகிழ்ந்தனர்

இதனால் ஐந்தருவி பகுதிகளிலும், சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. மேலும் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் செந்நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது. கோடை விடுமுறை என்பதால் நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்) அணிந்து பரிசல் துறையில் இருந்து பரிசலில் மணல் திட்டு வரை சென்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story