‘ஆன்–லைன்’ வர்த்தகத்துக்கு எதிர்ப்பு: மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட மருந்து கடைகள், வர்த்தகம் பாதிப்பு


‘ஆன்–லைன்’ வர்த்தகத்துக்கு எதிர்ப்பு: மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட மருந்து கடைகள், வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 31 May 2017 3:45 AM IST (Updated: 31 May 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

‘ஆன்–லைன்’ வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் மருந்து கடைகள் மூடப்பட்டன. ரூ.30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்,

இந்தியா முழுவதும் ‘ஆன்–லைன்’ மூலம் மருந்து வர்த்தகத்தை அனுமதிக்கவும், மருந்து கொள்முதல், விற்பனை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய ‘இ–போர்ட்டல்’ என்னும் எலக்ட்ரானிக் சேவையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற முடிவு செய்து இருக்கிறது.

இதற்கு மருந்து வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில், மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நேற்று மருந்து வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.

நோயாளிகள் தவிப்பு

திண்டுக்கல் நகரை பொறுத்தவரை சுமார் 200 மருந்து கடைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கடைகள் நேற்று மூடி இருந்தன. மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் சில மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. இதே போல, கொடைக்கானல், பழனி, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை என மாவட்டம் முழுவதும் மருந்து கடைகள் மூடப்பட்டன.

இதனால் நோயாளிகள் மருந்து வாங்க முடியாமல் தவித்தனர். மருந்து கடைகளை தேடி அலைய வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டது. மேலும், மருந்து வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் லியோ பிரதீப் கூறியதாவது:–

ரூ.30 கோடி வர்த்தகம் பாதிப்பு

மத்திய அரசின் முயற்சி கடுமையான பாதிப்பை தரும். இது மருந்து வணிகர்களுக்கு மட்டும் அல்ல. பொதுமக்களும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். அதாவது, போதை மாத்திரைகள், போதை மருந்துகள் சர்வ சாதாரணமாக கிடைக்கும். டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்து வாங்கலாம். இதனால் தவறான மருந்துகள் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. காலாவதியான மருந்து, மாத்திரைகள் தாராளமாக விற்கப்படும். கிராமப்புறங்களில் மருந்து கடைகளை மூடப்படும் நிலை வரும். வணிகர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதால்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

இந்த போராட்டம் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் 700 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. மருத்துவமனையுடன் இணைந்து இயங்கும் சுமார் 100 மருந்து கடைகள் திறந்திருந்தன. இந்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story