சரக்கு சேவை வரியினால் புதுச்சேரிக்கு பாதிப்பு ஏற்படாது மத்திய மந்திரி உறுதி


சரக்கு சேவை வரியினால் புதுச்சேரிக்கு பாதிப்பு ஏற்படாது மத்திய மந்திரி உறுதி
x
தினத்தந்தி 31 May 2017 4:15 AM IST (Updated: 31 May 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு மற்றும் சேவை வரியினால் புதுச்சேரிக்கு பாதிப்பு ஏற்படாது என்று மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி கூறினார்.

புதுச்சேரி,

சரக்கு மற்றும் சேவை வரியினால் புதுச்சேரிக்கு பாதிப்பு ஏற்படாது என்று மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி கூறினார்.

மத்திய சிறுகுறு, நடுத்தர தொழில்துறை இணைமந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி புதுவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அன்னிய முதலீடு

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இந்த 3 ஆண்டுகளில் ஏழைகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

அனைவருக்கும் வங்கிக்கணக்கு, தூய்மை இந்தியா திட்டம், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், விவசாயிகளுக்கான பயிர்காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையில் ரெயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தெளிவான வெளியுறவு கொள்கையினால் பக்கத்து நாடுகளுடன் நட்புறவு பலப்பட்டுள்ளது.

பாதிப்பு ஏற்படாது

நாடு முழுவதும் வருகிற ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலாக உள்ளது. இந்த சட்டத்தின்படி பொருட்கள் எங்கு உற்பத்தியாகிறதோ அங்குதான் வரி விதிக்கப்படும். புதுவையை பொறுத்தவரை நுகர்வோர் மாநிலம் என்பதால் இதற்கு நன்மை ஏற்படும். புதுச்சேரிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின்கீழ் புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.85 கோடி கொடுத்துள்ளது. 50 பஸ்கள் வாங்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ.8 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 6 லட்சம் எல்.இ.டி. பல்புகள் கொடுத்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயாரிக்க ரூ.2 கோடி கொடுத்துள்ளோம்.

திட்டவரைவு

அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.90 கோடி ஒதுக்கியுள்ளோம். பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் 3,800 வீடுகள் கட்டப்பட உள்ளது. தொழில் மேம்பாட்டுக்காக பல்வேறு தொழில்களை ஒருங்கிணைத்து குழு உற்பத்தி பிரிவுகள் தொடங்க திட்டவரைவு அனுப்பும்படி மாநில அரசிடம் கேட்டுள்ளோம். புதுவையில் விரைவில் திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி மையம் அமைக்கப்படும். தேசிய அறிவுசார் இணைய திட்டத்தின்கீழ் 8 கல்வி நிலையங்கள் புதுச்சேரியில் தேர்வு செய்யப்பட்டன.

இவ்வாறு மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி கூறினார்.

துப்புரவு பணி

முன்னதாக அவர் நேருவீதி–பாரதிவீதி சந்திப்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் துப்புரவு பணிகளை மேற்கொண்டார். அப்போது புதுவை மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story