ஸ்கூட்டர் சாலையில் உருண்டது லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன பெண் ஊழியர் சாவு கணவர் கண்முன்னே நடந்த சோகம்
மங்களூரு அருகே ஸ்கூட்டர் சாலையில் உருண்டதால் கீழே விழுந்த தனியார் நிறுவன பெண் ஊழியர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
மங்களூரு,
மங்களூரு அருகே ஸ்கூட்டர் சாலையில் உருண்டதால் கீழே விழுந்த தனியார் நிறுவன பெண் ஊழியர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். கணவர் கண்முன்னே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்மங்களூரு அருகே உள்ள கெஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் பாலா பிரதீப். இவரது மனைவி நீரஜா பினராய்(வயது 30). இவர் மங்களூரு டவுன் சிவபாக் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் நீரஜா பினராய் தனது கணவர் பாலா பிரதீப்புடன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். ஸ்கூட்டரை பாலா பிரதீப் ஓட்டினார்.
அவர்கள் கத்ரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நந்தூர் சர்க்கிள் பகுதியில் சென்ற போது பாலா பிரதீப்பின் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் தாறுமாறாக ஓடி சாலையில் உருண்டது.
உடல்நசுங்கி சாவுஇதில் ஸ்கூட்டரில் இருந்து பாலா பிரதீப்பும், நீரஜா பினராயும் கீழே விழுந்தனர். அப்போது ஸ்கூட்டரின் பின்னால் வந்து கொண்ட இருந்த லாரி நீரஜா பினராயின் மீது ஏறி, இறங்கியது. இதில் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். தன் கண்முன்னே தனது மனைவி இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலா பிரதீப், நீரஜா பினராயின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து அறிந்த கத்ரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான நீரஜா பினராயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரி சக்கரம் ஏறி, இறங்கியதில் கணவர் கண்முன்னே மனைவி உடல்நசுங்கி இறந்த சம்பவம் நந்தூர் சர்க்கிள் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.