கோட்டா பகுதியில் குட்டையில் மூழ்கி தாய்- 2 மகள்கள் சாவு


கோட்டா பகுதியில் குட்டையில் மூழ்கி தாய்- 2 மகள்கள் சாவு
x
தினத்தந்தி 1 Jun 2017 2:00 AM IST (Updated: 1 Jun 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

கோட்டா பகுதியில் குட்டையில் மூழ்கி தாய்- 2 மகள்கள் பரிதாபமாக இறந்தனர்.

மங்களூரு,

கோட்டா பகுதியில் குட்டையில் மூழ்கி தாய்- 2 மகள்கள் பரிதாபமாக இறந்தனர்.

பள்ளம் தோண்டினார்

உடுப்பி தாலுகா கோட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அம்பாரு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரஷெட்டி. இவருக்கும் கோட்டா பகுதியை சேர்ந்த நரசிம்ம ஷெட்டியின் மகள் பாரதிஷெட்டி(வயது 42) என்பவருக்கும் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு பிரித்வி(21), பிரஜ்னா(18) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

பாரதிஷெட்டியின் தந்தை நரசிம்மஷெட்டி விவசாயம் செய்து வருகிறார். இதனால் தனது தந்தைக்கு உதவி செய்ய பாரதிஷெட்டி தனது மகள்களான பிரித்வி, பிரஜ்னா ஆகியோருடன் நரசிம்மஷெட்டியின் வீட்டில் தங்கி இருந்தார். சுரேந்திரஷெட்டி மட்டும் அம்பாரு பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

நரசிம்மஷெட்டி தனது விவசாய நிலத்தின் அருகில், தண்ணீரை தேக்கி வைக்க குட்டையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோண்டினார். இந்த நிலையில் மழை காலங்களில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேக்கி வைத்தார். அந்த குட்டையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை மூட்டையாக கட்டி, ஈரமாக்க போட்டு இருந்தார்.

3 பேர் சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த குட்டையில் ஈரமாக்க போடப்பட்டு இருந்த நெல் மூட்டைகளை எடுத்து வருவதற்காக பாரதிஷெட்டி, பிரித்வி, பிரஜ்னா ஆகிய 3 பேரும் சென்று இருந்தனர். அப்போது அந்த குட்டைக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பாரதிஷெட்டி, பிரித்வி, பிரஜ்னா ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் 3 பேரும் வீட்டுக்கு திரும்ப வராததால் சந்தேகமடைந்த நரசிம்மஷெட்டி அவர்களை தேடி விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தார்.

அப்போது குட்டையில் பாரதிஷெட்டி, பிரித்வி, பிரஜ்னா ஆகிய 3 பேரும் பிணமாக மிதந்தார்கள். அப்போது தான் நெல்மூட்டைகளை எடுக்க குட்டையில் இறங்கிய போது 3 பேரும் நீரில் மூழ்கி பலியானது அவருக்கு தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நரசிம்மஷெட்டி 3 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த கோட்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுப்பி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்து கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குட்டையில் மூழ்கி மூழ்கி தாய்- 2 மகள்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story