சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக சாமுண்டி மலைக்கு இரவு 9 மணிக்குமேல் செல்ல தடை


சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக சாமுண்டி மலைக்கு இரவு 9 மணிக்குமேல் செல்ல தடை
x
தினத்தந்தி 1 Jun 2017 2:30 AM IST (Updated: 1 Jun 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு! கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்த படியாக உலக அளவில் பெயர் பெற்று வரும் ஒரு முக்கிய நகரம்.

மைசூரு! கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்த படியாக உலக அளவில் பெயர் பெற்று வரும் ஒரு முக்கிய நகரம்.

பழமை மாறாத நகரம்

மைசூரு என்றாலே சுற்றுலா நகரம், பாரம்பரியம், கலாசாரம், மன்னர்கள் வாழ்ந்த நகரம், பழமையான நகரம் என்று பலவற்றை சொல்வார்கள். அதற்கு ஏற்றார்போல் இன்னும் அங்கு பழமை மாறாமல் அரண்மனைகள், மன்னர்கள் வாழ்ந்த இடங்கள் இருக்கின்றன. கர்நாடகத்தின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் நகரமாகவும் மைசூரு விளங்குகிறது.

அதனால்தான் கடந்த 2 முறையும் நாட்டின் தூய்மை நகர பட்டியலில் மைசூரு நகரம் முதல் இடத்தை பிடித்தது. மேலும் மைசூருவில் அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டி மலை மற்றும் பழமை மாறாத இடங்கள், கோவில்கள் உள்ளன. இதுதவிர மைசூருவுக்கு அருகே கே.ஆர்.எஸ். அணை மற்றும் பிருந்தாவன் பூங்கா ஆகியவை உள்ளன. அவற்றைக் காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மைசூருவுக்கு வந்து செல்கின்றனர். கர்நாடகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் மைசூருவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

சுற்றுலா பயணிகள்

இப்படி பல்வேறு சிறப்பு மிக்க மைசூருவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் சாமுண்டி மலைக்கு சென்று அங்கு சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்காமல் செல்லமாட்டார்கள். அரசியல் தலைவர்களும், முக்கிய நபர்களும் கூட சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.

இத்தகைய புகழ்பெற்று விளங்கும் சாமுண்டி மலையின் மேலிருந்து பார்த்தால் மைசூரு நகரின் ரம்மியமான அழகை பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக இரவு நேரங்களில் மலையின் மேலிருந்து மைசூரு நகரின் அழகை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

மைசூரு நகரின் ரம்மியமான அழகு

இப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜப்பானில் இருந்து மைசூருவுக்கு சுற்றுலா வந்த பயணிகள் சிலர் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு முடிவில் சாமுண்டி மலைக்கு சென்றனர். அங்கு கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள் பின்னர் இரவில் மலையின் மேலிருந்து மைசூரு நகரின் ரம்மியமான அழகை ரசிப்பதற்காக காத்திருந்தனர். அவர்கள் இரவு 9 மணி வரை அங்கு இருந்து மைசூரு நகரை பார்த்து ரசித்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட தயாரானபோது அங்கு வந்த சில மர்ம நபர்கள், அவர்களை சரமாரியாக தாக்கி அவர்களிடமிருந்து பணம், செல்போன்கள், கேமரா உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருட்டு சம்பவங்கள்...


இதுமட்டுமல்லாமல் சாமுண்டி மலையில் தொடர்ந்து கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. இதுதொடர்பாக நிறைய புகார்களும் குவிந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக இந்த குற்ற சம்பவங்கள் அனைத்தும் இரவு 9 மணிக்கு மேல்தான் நடந்துள்ளது என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

அதனால் இரவில் மலைப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் தொடர்ந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வந்தன.

மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி


இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் மைசூரு சாமுண்டி மலைக்கு சுற்றுலா பயணிகள் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை செல்ல தடை விதித்துள்ளது. அதாவது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே சாமுண்டி மலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இரவு 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரன்தீப்பிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இரவு 9 மணிக்கு மேல் செல்ல தடை

சாமுண்டி மலையில் இரவு நேரங்களில் நிறைய குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அது தொடர்பாக ஏராளமான புகார்களும் குவிந்துள்ளன. சமீபத்தில் சாமுண்டி மலைக்கு வந்த ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகளை மர்ம நபர்கள் தாக்கி அவர்களுடைய பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். போலீசாரால் யார் சுற்றுலா பயணி? யார் மர்ம நபர்? என்று கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த குற்ற சம்பவங்களில் பெரும்பாலானவை இரவு நேரங்களில் மட்டுமே நடந்துள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காகவும், மலையின் மேல் வசித்து வரும் மக்கள் மற்றும் அங்கு வேலை பார்த்து வருபவர்களின் நலனுக்காகவும் சாமுண்டி மலைக்கு இரவு 9 மணிக்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

3 சோதனைச்சாவடிகளும் மூடல்

சாமுண்டி மலையில் தாவரகட்டே, நந்தி சிலை, உட்டனஹள்ளி ஆகிய 3 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு 9 மணிக்கு 3 சோதனைச் சாவடிகளும் மூடப்படும். மலையின் மேல் பகுதியில் வசித்து வருபவர்கள் இரவில் மேலிருந்து கீழே வரவேண்டுமானாலும், கீழிருந்து மேலே செல்ல வேண்டுமானாலும் போலீசாரின் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுவார்கள்.

இதுமட்டுமல்லாமல் மலையின் மேலிருந்து மைசூரு நகரின் அழகை பார்ப்பதற்காக மேல்பகுதியில் 2 இடங்களில் தொலைநோக்கிகள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசிடம் விரைவில் தெரியப்படுத்தி, நிதி பெற்று பின்னர் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story