காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆராய்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை தெரிவித்தார்.
மதுரை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் பி.பி.செல்லத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி துணைவேந்தர் தேர்வுக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தேன். இதில் விதிப்படி, 8.8 சதவீத மதிப்பெண் அடிப்படையில் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதாவது, அத்தனை தகுதிகளையும் பெற்றுள்ளதால் மட்டுமே துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
பல்கலைக்கழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன். பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் அனைவரிடமும் நட்புமுறையில் பழகுவேன். ஆனால், வேலையில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறையை பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்ய உள்ளேன்.
துறைகளில் எப்போதும்ஆசிரியர்களின் பணி என்பது கல்வி கற்பித்தல், ஆராய்ச்சி செய்தல், சமூகப்பணி செய்தல் ஆகியனவாகும். அந்த பணியை தொய்வில்லாமல் தொடரவே இந்த முறை கொண்டு வரப்படுகிறது. இதனால் கூடுதல் பணிச்சுமை குறைக்கப்படும். துறைத்தலைவர்கள் உள்பட உதவி பேராசிரியர்கள் வரை அனைவரும் பல்கலைக்கழகத்தில் தங்களது துறைகளில் எப்போதும் இருக்க வேண்டும்.
இதன்மூலம் சர்வதேச பல்கலைக்கழங்களின் பட்டியலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தையும் இடம் பெற செய்ய முடியும். இன்னும் 2 வருடங்களில் இந்த சாதனையை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மூத்த பேராசிரியர்கள் கூடுதல் சிரத்தையுடன் கல்வி கற்பிக்க வேண்டும்.
பி.எச்டி. மாணவர் எண்ணிக்கைதுணைவேந்தர் இல்லாத போது பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 10 வருடங்களுக்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாக இருப்பவர்களை நிரந்தமாக்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
பி.எச்டி. வழிகாட்டிக்கான மாணவர்களின் எண்ணிக்கையை பல்கலைக்கழக மானியக்குழு குறைத்துள்ளது அறிவியல்பூர்வமான நடவடிக்கை இல்லை. தேர்வுத்துறையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. தொலைநிலைக்கல்வி இயக்கத்தில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தில் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆராய குழு அமைக்கப்படுகிறது.
நடவடிக்கைஇந்த குழுவினர் ஒரு மாதத்துக்குள் தங்களது பரிந்துரையை அளிக்கவும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு, இந்த புகாரில் தொடர்புடையவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், முறைகேடாக பெற்ற பணமும் அவரவரிடம் இருந்து வசூலிக்கப்படும்.
காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் எம்.பி.ஏ. வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ., பட்டப்படிப்பிற்கு ஏ.ஐ.சி.டி.இ. ஒப்புதல் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு மாதத்துக்குள் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, பதிவாளர் (பொறுப்பு) சின்னையா, தொலைநிலைக்கல்வி இயக்குனர்(பொறுப்பு) கலைச்செல்வன், துணைவேந்தர் செயலக அலுவலர்கள் நாகசுந்தரம், சசிகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர்(பொறுப்பு) அறிவழகன் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.