மதகு கட்டுமான பணிக்கு சவுடுமண் பயன்படுத்துவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்


மதகு கட்டுமான பணிக்கு சவுடுமண் பயன்படுத்துவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 1 Jun 2017 4:30 AM IST (Updated: 1 Jun 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு அருகே மதகு கட்டுமான பணிக்கு சவுடுமண் பயன்படுத்துவதை கண்டித்து லாரியை மறித்து மண்ணை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சுமூலையில் அரிச்சந்திரா ஆற்றின் குறுக்கே புதிதாக மதகு கட்டப்பட்டு வருகிறது. இந்த மதகு கட்டுமான பணி அரிச்சந்திரா ஆற்றில் இருந்து எடுக்கப்படும் சவுடு மண்ணை வைத்து கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதகு கட்டுமான பணிக்காக சவுடு மண் ஏற்றி வந்த லாரியை தலைஞாயிறு கடைதெருவில் பொதுமக்கள் மறித்து மண்ணை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கராஜ், தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருணாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அரிச்சந்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மதகுக்கு சவுடுமண் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மதகின் உறுதி தன்மை குறைந்து காணப்படும். எனவே இந்த கட்டுமான பணிக்கு சவுடு மண் பயன்படுத்தக்கூடாது என்று பொதுமக்கள் கூறினர். இதையடுத்து கட்டுமான பணிக்கு தேவையான மணல் கிடைக்கும் வரை பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தலைஞாயிறு - திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story