புனே அருகே லாரி மோதி ஆம்புலன்ஸ், வேனில் இருந்த பெண் உள்பட 3 பேர் பலி
புனே அருகே லாரி மோதியதில் ஆம்புலன்ஸ், வேனில் இருந்த 3 பேர் பலியானார்கள். இறந்தவர் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்ற போது இந்த துயர சம்பவம் நடந்தது.
புனே,
புனே அருகே லாரி மோதியதில் ஆம்புலன்ஸ், வேனில் இருந்த 3 பேர் பலியானார்கள். இறந்தவர் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்ற போது இந்த துயர சம்பவம் நடந்தது.
ஆம்புலன்ஸ்மும்பையில் வசித்து வருபவர் ரத்தன்சுதார். இவரது மகன் உமர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். மகனின் உடலை அடக்கம் செய்வதற்காக சோலாப்பரில் உள்ள மங்கள்வேடா கிராமத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து சென்று கொண்டிருந்தார். பின்னால் ஒரு வேனில் அவரது குடும்பத்தினர் சென்றனர்.
ஆம்புலன்ஸ் மற்றும் வேனில் மொத்தம் 13 பேர் இருந்தனர். நேற்று காலை இரண்டு வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக புனே – சோலாப்பூர் நெடுஞ்சாலையில் சென்றன.
விபத்துஇரவு முழுவதும் பயணம் செய்ததால் ஓய்வு எடுப்பதற்காக இந்தாப்பூர் பகுதியில் சாலையோரத்தில் ஆம்புலன்சும், வேனும் நிறுத்தப்பட்டன. இரண்டு வாகனங்களும் நின்ற அடுத்த நொடியில் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று வேன் மீது பலமாக மோதியது.
அப்போது முன்னால் நின்ற ஆம்புலன்சை வேன் இடித்து தள்ளியது. இதில் ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
3 பேர் பலிஇந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் வேனில் இருந்த ரியாஜ் சுதார் (27), கல்பனா (50) என்பவர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ரத்தன்சுதார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலாப்பூர் மற்றும் அகலூஞ் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.