கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 45.90 அடி உயர்வு 1,024 கன அடி தண்ணீர் வருகிறது


கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 45.90 அடி உயர்வு 1,024 கன அடி தண்ணீர் வருகிறது
x

கிருஷ்ணகிரி அணைக்கு 1,024 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காய்ந்த நிலையில் இருந்த புல்வெளிகளும், விவசாய பயிர்களும் மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

தற்போது தென்பெண்ணை ஆற்றுப்படுகை மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நீர்மட்டம் உயர்வு

இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 1,024 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும். தற்போது அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் நீர்மட்டம் 45.90 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 12 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் நீர் நிரம்பி வருவதால் கடல் போல காட்சியளிக்கிறது.

வனப்பகுதிகளிலும் கன மழை பெய்து உள்ளதால் அங்குள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக தண்ணீரை தேடி வன விலங்குகள் ஊருக்குள் வருவது குறைந்துள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story