புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 1 Jun 2017 5:08 AM IST (Updated: 1 Jun 2017 5:08 AM IST)
t-max-icont-min-icon

புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று உலக புகையிலை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து சுகாதாரத்துறை சார்பாக புகையில்லா சுற்றுச்சூழல் உருவாக்கிய மாவட்டத்தில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ– மாணவிகள் மத்தியில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:–

தமிழ்நாட்டில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை 40.1 சதவீதத்தில் இருந்து 31.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மட்டும்தான் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்று தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு

சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் பொது இடங்களில் புகைபிடிப்பது, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விளம்பரம் செய்வது, 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் விற்பனை செய்வது, கல்வி நிறுவனங்களை சுற்றி 100 மீட்டர் அளவுக்குள் விற்பனை செய்வது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் புகையிலை வரியை அரசாங்கம் அதிகப்படுத்தி கொண்டிருப்பதன் நோக்கம் புகையிலை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே ஆகும். ஆகவே புகையிலையை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு மாணவ– மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதாமணி, பொதுநல மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ராஜேந்திரன், நெஞ்சக நோய்த்துறை தலைவர் டாக்டர் விஜய்ஆல்வின், மனநல மருத்துவர் டாக்டர் மீனாட்சி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் டாக்டர் சவுண்டம்மாள், டாக்டர் ஜெமினி மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ– மாணவிகள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story