மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி பொதுமக்கள் பீதி


மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 2 Jun 2017 4:30 AM IST (Updated: 2 Jun 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழந்தாள். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது இடையநல்லூர் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த அமரேசன் என்பவரது மகள் பூஜா (வயது 13). இவள் பெங்களூருவில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் பூஜா ஊருக்கு வந்திருந்தாள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவளை மத்திகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனாலும் குணமாகவில்லை. பின்னர் மாணவி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். ஆனால் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி பூஜா பரிதாபமாக உயிரிழந்தாள். மர்ம காய்ச்சல் காரணமாக மாணவி இறந்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் பீதி

மேலும் இடையநல்லூர் கிராமத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:- இங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. குப்பைகளும் சரியாக அள்ளப்படுவதில்லை. அதில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது.

இதன் காரணமாகவே தற்போது இந்த பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே, உடனடியாக இங்குள்ள குப்பைகளை அள்ளவும், சாக்கடை கால்வாய்களை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காய்ச்சல் பரவுவதை தடுக்க மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) இடையநல்லூர் கிராமத்தில் மருத்துவகுழு முகாமிட்டு பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story