காங்கிரசும், திராவிட இயக்கங்களும் எந்த மேலாதிக்கத்தை எதிர்த்து போராடியதோ அது மீண்டும் தலை தூக்குகிறது


காங்கிரசும், திராவிட இயக்கங்களும் எந்த மேலாதிக்கத்தை எதிர்த்து போராடியதோ அது மீண்டும் தலை தூக்குகிறது
x
தினத்தந்தி 2 Jun 2017 4:15 AM IST (Updated: 2 Jun 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியும், திராவிட இயக்கங்களும் எந்த மேலாதிக்கத்தை எதிர்த்து போராடி வளர்ந்ததோ அந்த மேலாதிக்கம் தற்போது மீண்டும் தலை தூக்கி வருவதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

காரைக்குடி,

காரைக்குடியில் இந்து மதாபிமான சங்கம் சார்பில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கம்பன் அறநிலை தலைவர் சக்திதிருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இந்து மதாபிமான சங்க தலைவர் ராமசாமி வரவேற்றார். துணைத்தலைவர் பேராசிரியர் அய்யக்கண் அறிமுக உரையாற்றினார். இந்து மதாபிமான சங்க செயலாளர் ராம.ராமசாமி அறிக்கை வாசித்தார்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நூற்றாண்டு மலரை வெளியிட்டு பேசியதாவது:-

நூற்றாண்டு விழாவை காணும் இந்து மதாபிமான சங்கம் நடத்திய விழாக்களில் பாரதியார், ராஜாஜி, அண்ணா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கல்விதான் அறிவைத் தருகிறது. அறிவுக் கண்ணோட்டத்துடன் எதையும் பார்க்க வேண்டும். அப்போது தான் இந்தியாவின் பன்முகத்தன்மை தெரியும். அறிவுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது தெரிவது நல்ல சமுதாயம்.

உண்மையான ஜனநாயக நாடு

அறிவை மறந்து ஜாதி, மதம் மற்றும் மொழி பெரும்பான்மையின் ஆதிக்கம் ஆகியவற்றின் வழியாக பார்த்தால் வேறு சமுதாயம் தெரியும். ஒரு நாட்டில் மறுப்புக்குரல் ஒலிப்பதற்கான உரிமை இருக்க வேண்டும். இது இல்லையென்றால் அது உண்மையான ஜனநாயக நாடாக இருக்க முடியாது. ஜனநாயக முறைப்படி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் நாட்டை ஆளுவதற்கு அதிகாரம் பெற்றவர்கள் ஆவார்கள். ஆனால் ஆள்வதற்கு அவர்கள் எந்த ஆயுதத்தை பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க வேண்டும். தற்போது மதம், மொழி ஆகியவற்றை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். போராட்டங்கள் கூட அவற்றின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இது நல்லதல்ல.

ஏற்றுக்கொள்ள முடியாது

பெரும்பான்மை மேலாதிக்கம் மதத்தின் பெயரில் தோன்றினாலும் இறுதியில் ஜாதி மேலாதிக்கமாகவே மாறும். காங்கிரஸ் கட்சியும், திராவிட இயக்கங்களும் எந்த மேலாதிக்கத்தை எதிர்த்து போராடி வளர்ந்ததோ அந்த மேலாதிக்கம் மீண்டும் தலை தூக்குகிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதத்தையும், மொழியையும், உணவையும் ஆயுதமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் 103 வயதான ராயவரம் பழனியப்ப செட்டியார் கலந்துகொண்டு நினைவு பரிசுகளை வழங்கினார். முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா சிறப்புரையாற்றினார். பேராசிரியர் கண்ணப்பன், கவிஞர் சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழா மலரை ப.சிதம்பரம் வெளியிட அதை முத்துக்கணேசன் பெற்றுக்கொண்டார். விழாவில் தொழிலபதிபர் பி.எல்.படிக்காசு, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுந்தரம், துரைராஜ், சுப்புராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story