ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு


ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Jun 2017 4:15 AM IST (Updated: 2 Jun 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் ஒன்றியத்தில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட லத்துவாடி, அரூர், வளையப்பட்டி, ஆண்டாபுரம், பேட்டப்பாளையம், பெருமாண்டம்பாளையம், கே.புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் தொடக்கமாக லத்துவாடி ஊராட்சி மேல் ஈச்சவாரி பகுதியிலும், அரூர் ஊராட்சி, வடிவேல்கவுண்டனூர் பகுதியிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் பணிகளையும், அரூர் புதூர் பகுதியில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.5.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

மேலும், இதே ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.12.18 லட்சம் மதிப்பீட்டில் அரூர் அணைக்கட்டு நீர்வரத்து கால்வாய், வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி உள்பட மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.49.16 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைவாக முடித்திட உத்தரவு

பின்னர் அனைத்து பணிகளையும் தரமாகவும், தாமதமின்றி விரைவாகவும் முடித்திட வேண்டும் எனவும், அனைத்து மரக்கன்றுகளையும் நல்ல முறையில் பராமரித்து தொடர்்ந்து நீர் ஊற்றி பாதுகாப்பாக வளர்த்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மோகனூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயக்குமார், தேன்மொழி, ஒன்றிய பொறியாளர் சாந்தி, உதவிப்பொறியாளர் கல்பனா, பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட மோகனூர் ஒன்றிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story