கடந்த 2011–ம் ஆண்டு முதல் இதுவரை 79,708 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
வேலூர் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
வேலூர்,
கடந்த 2011–ம் ஆண்டு முதல் இதுவரை வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 79 ஆயிரத்து 708 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தேசிய அடையாள அட்டைதமிழக அரசு பல்வேறு துறைகள் மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமும் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2011–ம் ஆண்டு முதல் இதுவரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 79 ஆயிரத்து 708 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 48 ஆயிரத்து 227 பேர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500 வீதம் 4 ஆயிரத்து 545 பயனாளிகளுக்கு ரூ.32 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
தொழுநோய்ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 வீதம் 513 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 76 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500 வீதம் 105 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்து 29 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தொழுநோய் பாதிக்கப்பட்டு குணமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,000 வீதம் 210 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 43 லட்சத்து 73 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
திருமண உதவித் தொகைகை, கால் பாதிக்கப்பட்ட, செவித்திறன்குறையுடைய, பார்வையற்ற மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொண்டதன் மூலம் பயனடைந்த 382 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 70 ஆயிரம் மற்றும் தலா 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்திட ஏதுவாக மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 294 பேருக்கு ரூ.24 லட்சத்து 17 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு சுயதொழில் செய்து வருகின்றனர்.
கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 1–ம் வகுப்பு முதல் பட்டய படிப்பு வரையிலான கல்வி உதவித்தொகை இதுவரை 4 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளுக்கு ரூ.97 லட்சத்து 92 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 644 அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை அட்டைகள் ரூ.9 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.