ரூ.100 கோடியில் ஏரிகள் தூர்வாரும் பணி அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேச்சு
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த ரூ.100 கோடியில் ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடப்பதாக ஆரணியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசினார்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த ரூ.100 கோடியில் ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடப்பதாக ஆரணியில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசினார்.
ஜமாபந்திஆரணி தாலுகாவில் ஜமாபந்தி நடைபெற்று வந்தது. ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் ஜமாபந்தி நிறைவு நாளையொட்டி விவசாயிகளின் மாநாடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஜி.சுப்பிரமணி தலைமையில் நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணி, இடர்பாடு தாசில்தார் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் மு.தமிழ்மணி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 1,539 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ரூ.100 கோடியில்...அப்போது அவர் பேசுகையில், ‘‘ஆரணி தாலுகாவில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, ரேஷன் அட்டை கோருதல், பொது பிரச்சினை சம்பந்தமாக 1,827 மனுக்கள் பெறப்பட்டது. இன்றைய தினத்தில் 1,539 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 93 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுதாரர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைத்து விடும். மேலும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் நமது மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரம் பெற
800 ஏரிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல தற்போது ஏரி தூர்வாரும் பணி ரூ.100 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக ரூ.300 கோடியில் பணிகள் மேற்கொள்வதற்கு திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினிராமச்சந்திரன், வேட்டவலம் மணிகண்டன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் க.சங்கர், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், பாசறை பாரி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.