தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கம்மாபுரம் ஒன்றியக்குழு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கம்மாபுரம் ஒன்றியக்குழு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Jun 2017 3:30 AM IST (Updated: 3 Jun 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கம்மாபுரம் ஒன்றியக்குழு அலுவலத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்மாபுரம்,

விருத்தாசலம் அருகே கார்குடல், கோ.மாவிடந்தல், பொன்னேரி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வறட்சி காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட கிராமங்களில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை என்றும், இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே வேலை செய்த சில தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்த கோரிக்கைகள் குறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில், தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும், ஏற்கனவே வேலை செய்தவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் தண்ணிமலை தலைமையில் கிராம மக்கள் கம்மாபுரம் ஒன்றியக்குழு அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சில பெண்கள் காலி குடங்களை கையில் வைத்துக் கொண்டு கோ‌ஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் வட்ட செயலாளர் அசோகன், இளங்கோவன், கலைச்செல்வன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story