கடலூர் கோர்ட்டில் தாயை பார்க்க வந்த பெண்ணுக்கு பிரசவம்
கடலூர் கோர்ட்டில் தாயை பார்க்க வந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
கடலூர்,
பண்ருட்டி புதுப்பேட்டை ஏ.பி.குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி தமிழரசி (வயது 45). இவர் சாராய வழக்கில் புதுப்பேட்டை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழரசி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக வேலூர் போலீசார் நேற்று மாலை 2.30 மணி அளவில் கடலூருக்கு வாகனத்தில் அழைத்து வந்தனர். தமிழரசி வருவதை அறிந்த அவருடைய மகளும், நிறைமாத கர்ப்பிணியுமான மாலதி (25) உறவினர்களுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார். அதைத்தொடர்ந்து கோர்ட்டில் தமிழரசியை சந்தித்து பேசிய மாலதி 3 மணி அளவில் வெளியே சென்று விட்டு வருவதாக கூறினார்.
குழந்தை பிறந்ததுஆனால் அவர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதை அறிந்ததும் மாலதியுடன் வந்தவர்கள் அவரை தேடினர். அப்போது மாலதி கோர்ட்டு வளாகத்தில் உள்ள குளத்தில் கொளுத்தும் வெயிலில் கீழே விழுந்து பிரசவ வலியுடன் துடித்ததை அவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் மாலதிக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாயையும், சேயையும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அங்கிருந்த வக்கீல்கள், கோர்ட்டு பெண் ஊழியர்கள், உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் கடலூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வேறு இடத்துக்கு சென்றதால், நெல்லிக்குப்பத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
தாயும், சேயும் நலம்30 நிமிடத்துக்கு பிறகு வந்த ஆம்புலன்சில் தாயையும், சேயையும் அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாலதியின் கணவர் பார்த்தசாரதி. இவர் சென்னையில் உள்ள பிரபல கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே கடலூர் மாஜிஸ்திரேட்டு 1–வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழரசியை போலீசார் பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்து சென்றனர்.
முன்னதாக கோர்ட்டு வளாகத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்ட தகவல் அறிந்ததும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் அந்த பகுதியில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.