போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் நல்ல முடிவு ஏற்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் நல்ல முடிவு ஏற்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 3 Jun 2017 4:15 AM IST (Updated: 3 Jun 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்று தெரிவித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னையில் மின்சார பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

தாம்பரம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 1–9–2016 முதல் அமலுக்கு வரவேண்டிய 13–வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 8–வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று காலை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்தது.

பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பி.டபிள்யூ.தேவிதார், நிதி துறை கூடுதல் செயலாளர் ஆனந்தகுமார், நிதித்துறை துணை செயலாளர் கிருஷ்ணன் உண்ணி மற்றும் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள், 47 தொழிற்சங்கங்களை சேர்ந்த 94 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சுமார் 2½ மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர், நிருபர்களிடம் கூறியதாவது:–

நிலுவைத்தொகை

போக்குவரத்து கழகத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை முதல்–அமைச்சரிடம் எடுத்து கூறினேன். அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிதி வழங்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள ரூ.500 கோடிக்கு உண்டான அரசு ஆணைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

செப்டம்பர் மாதம் இறுதியில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீதம் உள்ள தொகையை வழங்க முதல்–அமைச்சர் ஒப்புக்கொண்டு உள்ளார். அதோடு அவர்களின் நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விடும்.

இன்னும் ஓரிரு பேச்சுவார்த்தையில் சம்பள பேச்சுவார்த்தை முடிவுற்று 13–வது ஊதிய ஒப்பந்த உடன்பாடு ஏற்பட்டு விடும். 12 அல்லது 13–ந் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். எனவே போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறோம்.

மின்சார பஸ் இயக்கம்

போக்குவரத்து துறையை நவீனப்படுத்த முதல்–அமைச்சரிடம் கலந்து பேசினோம். சென்னையில் மின்சார பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதிரி ஓட்டம் நடத்த 2 நிறுவனங்களிடம் பேசி இருக்கிறோம். கூடிய விரைவில் மாதிரி ஓட்டம் சென்னையில் நடத்தப்படும். இது சென்னை மாநகரத்தில் ஓடக்கூடிய பஸ்சாக இருக்கும்.

படுக்கை வசதிகளுடன் கூடிய பஸ்களை இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து கழகத்தில் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம். இதர வழிகளிலே வருவாயை பெருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை குழு

சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் சார்பில் தொ.மு.ச. செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:–

பேச்சுவார்த்தையில் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதாக கூறினார்கள். நிறைவேற்றப்படாமல் மீதம் உள்ள ஒப்பந்தங்களை எப்படி நிறைவேற்றப்படும் எனவும் கேட்டு உள்ளோம்.

கூட்டத்தில் ஊதிய உயர்வு, நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை பற்றி பேச துணை குழு நியமித்து, பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், அடுத்தகட்டமாக அமைச்சருடன் பேசலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story