மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2017 4:30 AM IST (Updated: 3 Jun 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாட்டு தலை மற்றும் எலும்புகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி,

மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்த தடைக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேனி பங்களாமேடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் ஆற்றலரசு, தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

மாட்டு தலையுடன்...

ஆர்ப்பாட்டத்தின் போது மாட்டின் தலை மற்றும் எலும்புகளை சிலர் எடுத்து வந்தனர். அவற்றை கடித்து தின்பது போன்ற செய்கைகள் காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று, தொண்டர் ஒருவர் பொய்க்கால் மாடு வேடத்தில் நடனம் ஆடினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.


Next Story