கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் குடியிருப்புகள் மத்தியிலும், தொழிற்சாலைகளுக்கு மத்தியிலும் மதுக்கடை உள்ளது. இந்த கடைக்கு வெளியிடங்களில் இருந்து மது குடிக்க வருபவர்களும், சில வடமாநில தொழிலாளர்களும் குடிபோதையில் அந்த வழியாக செல்லும் பெண்களையும், தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களையும் ஆபாசமாக பேசி கிண்டல் செய்து வருவதாக புகார் எழுந்து உள்ளது. மேலும் சிப்காட் பகுதியில் உள்ள சாலைகளில் அமர்ந்து மது குடிப்பது வாகன விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.
மேற்கண்ட மதுக்கடையால் சிப்காட் தொழிற்சாலை நிர்வாகத்தினரும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முற்றுகைஇந்த நிலையில் கடந்த மாதம் 5–ந்தேதி மேற்கண்ட மதுக்கடையை அகற்றக்கோரி புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதற்கு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை நிர்வாகத்தினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அப்போது சமாதான பேச்சுவார்த்தை நடத்திய சிப்காட் போலீசார் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த நிலையில் ஏற்கனவே போராட்டம் நடத்தி பயன் பெறாத காரணத்தால், மீண்டும் மேற்கண்ட மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடையை அகற்றக்கோரி கோஷம் எழுப்பினர். அப்போது மதுக்கடையை திறக்க வந்த ஊழியர்களால் கடையை திறக்க முடியவில்லை. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
ஜமாபந்தி முடிந்த உடன் நடவடிக்கைதகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இன்ஸ்பெக்டர் சுடலைமணி ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஏற்கனவே கடையை அகற்றுவது குறித்து தாசில்தாருக்கு மனு கொடுத்து இருப்பதால் தற்போது மேலும் ஒரு மனுவை அளிக்கும்படி போலீசார் அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். தற்போது கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.
எனவே ஜமாபந்தி முடிந்தவுடன் இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.