அரசு நிர்வாகத்தில் எல்லை மீறி தலையிடுவதாக கவர்னர் கிரண்பெடி மீது முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் கவர்னர், முதல்–அமைச்சர் இடையே மோதல் முற்றுகிறது அரசு நிர்வாகத்தில் கிரண்பெடி எல்லை மீறி தலையிடுவதாக நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி,
புதுச்சேரியில், அரசு நிர்வாகத்தில் எல்லை மீறி தலையிடுவதாக கவர்னர் கிரண்பெடி மீது முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் முற்றுகிறது.
கருத்து வேறுபாடுபுதுச்சேரியில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மருத்துவ கல்லூரி முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டினார்கள். இந்த விஷயத்தில் கவர்னர் கிரண்பெடி மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
அறிக்கை தாக்கல்மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவகாரம் குறித்து முழு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
அதன்படி எம்.எல்.ஏ.க்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சட்டசபையில் நேற்று நாராயணசாமி அறிக்கை ஒன்றை படித்தார். அப்போது கூறியதாவது:–
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னரின் நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். அதுகுறித்து பேசினால் விமர்சிப்பதுபோல் இருக்கும் என்பதால் நான் பேசாமல் இருந்தேன். தொடர்ந்து கவர்னர் சமூக வலைத்தளங்களில் புதுவை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஊழல்பேர்வழிகள் என்று கூறியுள்ளார். இப்படி கூற அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அவர் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் சட்டசபையில் தரட்டும். அதில் உண்மை இருந்தால் அதுகுறித்து நான் நடவடிக்கை எடுக்கிறேன். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை அவர் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சட்டசபை கூட்டம் முடிந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
ரூ.40 கோடிக்கு முறைகேடுகடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களிடம் மருத்துவ இடங்களை வாங்கி வெளிநபர்களுக்கு விற்றுள்ளனர். சுமார் ரூ.40 கோடி அளவுக்கு இதில் முறைகேடு நடந்துள்ளது.
நாங்கள் எங்கள் ஆட்சியில் வெளிப்படையாக கலந்தாய்வினை நடத்தி உள்ளோம். ஆனால் இந்த விஷயத்தில் கவர்னர் கிரண்பெடி மருத்துவ கவுன்சிலின் வழிமுறைகள் தெரியாமல் எங்கள் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
எல்லை மீறுகிறார்விதிமுறைகளுக்கு மாறாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விவகாரத்தில் தலையிட்டு 26 மாணவர்களுக்கு மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு கவர்னர் கூறியுள்ளார். அவர் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை வழிநடத்தி உள்ளார்.
கடந்த ஓராண்டுகளாக கவர்னர் பதவிக்கு மரியாதை கொடுத்து அவரைப்பற்றி பேசாமல் இருந்துவந்தேன். ஆனால் அவர் எல்லைமீறி செயல்படுகிறார். அரசியல் கட்சி தலைவர்களையும், அதிகாரிகளையும் ஊழல்பேர்வழிகள் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார். அரசு நிர்வாகம் குறித்து இவ்வாறு கூறுவது நாட்டின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கிவிடும். வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கும் அரசு நிர்வாகத்தில் அவர் தலையிடுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.