எத்தம்பாடி கிராமத்தில் அட்டகாசம் 5 ஆடுகளை, சிறுத்தை வேட்டையாடி கொன்றது
எத்தம்பாடி கிராமத்திற்குள் புகுந்த ஒரு சிறுத்தை, அங்கு 5 ஆடுகளை வேட்டையாடி கொன்று அட்டகாசம் செய்துள்ளது.
ஹலகூர்,
எத்தம்பாடி கிராமத்திற்குள் புகுந்த ஒரு சிறுத்தை, அங்கு 5 ஆடுகளை வேட்டையாடி கொன்று அட்டகாசம் செய்துள்ளது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
5 ஆடுகளை வேட்டையாடி...மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே உள்ள எத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. விவசாயி. இவர் சொந்தமாக 10 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அந்த ஆடுகளை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் இரை தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை, எத்தம்பாடி கிராமத்திற்குள் புகுந்தது. அது ராஜுவின் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்குள் புகுந்து, அங்கு 5 ஆடுகளை வேட்டையாடி கொன்றது.
ஆடுகள் அலறித் துடித்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து எழுந்து வந்த ராஜு, சிறுத்தையைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் தீப்பந்தம் காண்பித்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கைபின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் தனஞ்செயா, பசவண்ணா, கால்நடை டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஆடுகளை வேட்டையாடி கொன்றது, சிறுத்தைதான் என்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வனத்துறையினர் ஆடுகளை இழந்து பாதிக்கப்பட்ட ராஜுவுக்கு அரசிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தருவதாக உறுதி அளித்தனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். சிறுத்தையின் அட்டகாசத்தால் அந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.