சிம்ஷா நதியில் இருந்து வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை
வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு சிம்ஷா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நரேந்திரசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
ஹலகூர்,
வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு சிம்ஷா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நரேந்திரசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
சிம்ஷா நதியில் இருந்து தண்ணீர்மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே உள்ள தளவாயிகொன்டிஹள்ளி கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி அப்பகுதி விவசாயிகளுக்கு பெருமளவு உதவியாக இருந்தது. மேலும் அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகளின் தண்ணீர் தேவையை தீர்த்து வந்தது. இந்த நிலையில் அந்த ஏரி வறண்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்து, ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அறிந்த நரேந்திரசாமி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவிட்டு சிம்ஷா நதியில் இருந்து கால்வாய் அமைத்து ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.
இன்னும் 26 ஏரிகளுக்கு...அதன்படி நேற்று முன்தினம் சிம்ஷா நதியில் இருந்து தளவாயிகொன்டிஹள்ளி ஏரிக்கு தண்ணீர் வந்தடைந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நரேந்திரசாமி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் ஏரிக்கு வந்து, பூஜை செய்து தண்ணீருக்கு மலர்கள் தூவி வரவேற்றனர். பின்னர் நரேந்திரசாமி எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:–
சிம்ஷா நதியில் இருந்து கால்வாய் அமைத்து இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், வறண்டு கிடக்கும் 26 ஏரிகளுக்கும் சிம்ஷா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசிடம் கோரிக்கை வைத்து நிதி கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் புட்டராமு, சுந்தர் ராஜ், மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி சந்திரகுமார், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சரண், சிவ கெஞ்சேகவுடா, அம்பரீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.