ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு அரசு பஸ்களில் இலவச ‘பாஸ்’


ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு அரசு பஸ்களில் இலவச ‘பாஸ்’
x
தினத்தந்தி 3 Jun 2017 4:21 AM IST (Updated: 3 Jun 2017 4:21 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு பஸ்களில் பயணம் செய்ய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடக அரசு பஸ்களில் பயணம் செய்ய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் பல்வேறு துறைகளில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக மாநில வளர்ச்சிக்குழு ஆய்வுக் கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

சலுகை கட்டணம்


கூட்டத்தில் வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா, சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா, சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சனேயா, உயர்கல்வித்துறை மந்திரி பசவராஜ் ராயரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி சித்த ராமையா பேசியதாவது:-

கர்நாடகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு தற்போது சலுகை கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த கட்டணத்தில் 50 சதவீதத்தை அரசும், 25 சதவீதத்தை ஆதிதிராவிட வளர்ச்சி கழகமும் ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள 25 சதவீதத்தை மாணவர்கள் செலுத்துகிறார்கள்.

இலவச பஸ் பாஸ்

தற்போது அரசு பஸ்களில் பயணம் செய்ய ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி முதல் கல்லூரி வரை இந்த இலவச பஸ் பாஸ் வசதி வழங்கப்படும். போக்குவரத்துத்துறை இதற்கு தேவையான வரைவு அறிக்கையை தயாரித்து அனுப்ப வேண்டும். இதற்கு ஆண்டுக்கு ரூ.108 கோடி செலவாகிறது. இதற்கு ஆதிதிராவிட மக்களின் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் நிதியை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.

இந்த கூட்டத்தில் கர்நாடக பட்ஜெட்டில் பல்வேறு துறைகளில் ஆதிதிராவிட மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு மற்றும் இதுவரை அதில் எந்த அளவுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் இருந்து சித்தராமையா கேட்டு அறிந்தார். திட்டமிட்டப்படி நிதியை செலவு செய்த அதிகாரிகளை சித்தராமையா பாராட்டினார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

அதே நேரத்தில் அந்த நிதியை சரியாக செலவு செய்யாமல் இருக்கும் அதிகாரிகளை சித்தராமையா கடுமையாக கடிந்து கொண்டார். சம்பந்தப்பட்ட துறையின் முதன்மை செயலாளர், கமிஷனருக்கு நோட்டீசு வழங்குமாறு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். செலவு செய்யாத நிதியை திரும்ப அனுப்ப முடியாது. அவ்வாறு இருக்கும் நிதிக்கு அடுத்த ஆண்டில் திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்த நிதியை செலவு செய்வதில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்த சித்தராமையா இதற்காக சட்டத்திருத்தம் செய்யப்படும் என்றார். ஒரு செயல் திட்டத்தை வகுத்துவிட்டால் அதை அடிக்கடி திருத்தம் செய்யக்கூடாது. உரிய காரணம் இல்லாமல் அதில் திருத்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி சித்த ராமையா கூறினார். 

Next Story