கிருஷ்ணகிரியில் மாட்டு இறைச்சி சாப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் மாட்டு இறைச்சி சாப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகில் நேற்று நடந்தது. மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்தும், தமிழக அரசு இந்த சட்டத்தை ஏற்க கூடாது என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.கனியமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முனிராவ், மாவட்ட துணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வம், செய்தி தொடர்பாளர் வெங்கடேஷ், சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் மன்னர்மன்னன் (பர்கூர்), தியாகு (கிருஷ்ணகிரி), ராமச்சந்திரன் (ஓசூர்), ராசப்பா (தளி), செம்பட்டி சிவா (வேப்பனப்பள்ளி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் மாயவன் வரவேற்றார்.
மாட்டு இறைச்சி சாப்பிட்டனர்ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாட்டு இறைச்சியை சாப்பிட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தலைமை நிலைய செயலாளர் தமிழ்ச்செல்வன், மண்டல அமைப்பு செயலாளர் நந்தன் ஆகியோர் பேசினார்கள்.
இதில் மாநில நிர்வாகிகள் அசோகன், தமிழ்மணி, திருமா முத்தமிழன், செந்தமிழ், குபேந்திரன், சக்திவேல், நூர்முகமது, மூர்த்தி, ஜெயலட்சுமி, சரவணன், சிற்றரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.