மராட்டிய அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ‘ஜெய் மகாராஷ்டிரா’
மராட்டிய அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ‘ஜெய் மகாராஷ்டிரா’ லோகோ அச்சிடப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ‘ஜெய் மகாராஷ்டிரா’ லோகோ அச்சிடப்பட்டு உள்ளது. இந்த வாசகத்துடன் முதல் பஸ் கர்நாடக மாநிலம் பெலகாவிக்கு சென்றது.
கர்நாடகத்தில் எதிர்ப்புமராட்டியம் – கர்நாடக மாநில எல்லையில் அமைந்து உள்ளது பெலகாவி. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் இந்த பகுதியில் மராத்தி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள்.
எனவே பெலகாவியை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், அண்மையில் பெலகாவியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ‘ஜெய் மகாராஷ்டிரா’ என்று முழங்கினால் அவர்கள் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் கர்நாடக மூத்த மந்திரி ரோஷன் பெய்க் சமீபத்தில் தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் பேச்சை எதிர்த்து மராட்டியத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பஸ்களில் ‘ஜெய் மகாராஷ்டிரா’அதுமட்டும் அல்லாமல் மும்பை மாட்டுங்காவில் உள்ள கர்நாடக சங்க அரங்கத்திலும், தானேயில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் ‘ஜெய் மகாராஷ்டிரா’
வாசகத்தை எழுதி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ‘ஜெய் மகாராஷ்டிரா’ வாசகத்தை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு இறங்கி உள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக அரசு பஸ்களில், குறிப்பாக பெலகாவி செல்லும் மராட்டிய போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்திலும் ‘ஜெய் மகாராஷ்டிரா’ வாசகம் லோகோவாக அச்சிடப்பட்டு உள்ளது.
‘ஜெய் மகாராஷ்டிரா’ லோகோ ஒட்டிய முதல் பஸ் சேவை நேற்று மும்பை சென்டிரலில் இருந்து பெலகாவிக்கு கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.