தேன்கனிக்கோட்டை அருகே சிறுத்தை புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
தேன்கனிக்கோட்டை அருகே சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு உட்பட்டது வட்டவடிவுபாறை காப்புக்காடு. இங்கு யானைகள், மான்கள், கரடிகள், காட்டு எருமைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமமக்கள் கால்நடைகளை மேய்க்க காப்புக்காட்டையொட்டி சென்றுள்ளனர்.
அப்போது அங்கு ஒரு வன விலங்கின் கால்தடம் இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அது புலியின் கால் தடம் என நினைத்து அச்சமடைந்தனர். மேலும் அவர்கள் இது குறித்து மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவருடைய உத்தரவின்படியும், மாவட்ட வன துணை அலுவலர் பிரியதர்சினியின் ஆலோசனையின் படியும் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனத்துறையினர் வட்டவடிவுபாறை காட்டிற்கு சென்று அங்கு இருந்த வனவிலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தை புலியின் கால்தடம் என உறுதி செய்யப்பட்டது.
பொதுமக்கள் பீதிஇதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:– பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் இங்கு வந்து இந்த கால் தடத்தை ஆய்வு செய்தோம். அதில் இது சிறுத்தை புலியின் கால் தடம் என தெரியவந்தது. இந்த சிறுத்தைபுலி கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வந்திருக்கலாம்.
எனவே, பொதுமக்கள் யாரும் கால்நடைகளை மேய்ப்பதற்காகவோ, விறகு எடுக்கவோ வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம். மேலும் சிறுத்தை புலியின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தேன்கனிக்கோட்டை அருகே சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.