இன்று கும்பாபிஷேகம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு


இன்று கும்பாபிஷேகம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 4 Jun 2017 3:15 AM IST (Updated: 4 Jun 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

மடப்புரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக பணிகளை அமைச்சர்கள் பாஸ்கரன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருப்புவனம்,

திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரகாரங்கள், கோபுரங்கள் உள்ளிட்டவை அமைக்கும் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்ததை அடுத்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலைய துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று(4–ந்தேதி) காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த 29–ந்தேதி முதல் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர்கள் ஆய்வு

இந்தநிலையில் கோவிலில் இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் வருகை தந்து ஆய்வு செய்தனர். அமைச்சர்களை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையாளர் செந்தில் வேலவன், அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டும், யாகசாலை பூஜையிலும் அவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பூஜை பொருட்களை எடுத்துக் கொண்டு அமைச்சர்கள், கோவில் பிரகாரங்களை சுற்றிவந்தனர். பின்பு அவர்களுக்கு பட்டர் மணிசேகர சிவம் மரியாதை செய்தார். மேலும் அதிகாரிகளிடம் சுகாதார ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்பு கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரை பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் இளையராஜா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கணேசன், அறங்காவல் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், பாஸ்கரன், சரவணன், கமலா சிகாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story