திருப்பத்தூர் வாரச்சந்தையில் தேங்கிக்கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு


திருப்பத்தூர் வாரச்சந்தையில் தேங்கிக்கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 4 Jun 2017 4:00 AM IST (Updated: 4 Jun 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் வாரச்சந்தையில் சுகாதாரமற்ற நிலையில் இயங்கும் பகுதிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான 3–வது வார்டு தம்பிபட்டியில் நீண்ட காலமாக காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரத்தில் சனிக்கிழமை அன்று நடைபெறும் இந்த வாரச்சந்தைக்கு திருப்பத்தூர் மட்டுமின்றி பல்வேறு கிராம பகுதிகளில் இருந்தும் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக வியாபாரிகள் வருவார்கள். இதேபோல் விற்பனை செய்யப்படும் காய்கறிகளை வாங்குவதற்காக பொதுமக்கள் அங்கு கூடுவார்கள். நகரின் 18 வார்டுகளில் உள்ள இச்சந்தை வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்காகவும், குடிநீர் நிலையம் அமைக்கவும் இடங்கள் இதனுள் ஒதுக்கப்பட்டு சந்தை சுருக்கமானது. தற்போது ஆடு வெட்டும் வதைக்கூடம் மற்றும் மீன் விற்பனை நிலையமும் இதனுள் செயல்பட்டு வருகிறது.

கோரிக்கை

இப்பகுதி போக மீதி இருக்கும் இடத்தில் மக்களுக்கான காய்கறி சந்தை வளாகம் செயல்பட்டு வருகிறது. தற்போது இப்பகுதியிலும் பேரூராட்சி கட்டிடம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வாரச்சந்தை மேலும் மிகவும் சுருக்கமடைந்ததால் மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதனால் சந்தை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பை விளைவித்து வருகின்றன. மேலும் சந்தைக்கு வரும் பொதுமக்கள் பாதையை கடப்பதற்குள் கடும் அவதியடைகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் மக்களுக்கும் காய்கறி, கனி வியாபாரிகளுக்கும் சாலை வசதி மற்றும் சுகாதாரமுள்ள பகுதியாக சந்தையை மாற்றித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுத்தபாடில்லை. எனவே வாரத்தில் ஒருநாள் என்பதால் அலட்சியம் காட்டாமல் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறைக்கு ஆணையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story