விருதுநகர்–மதுரை இடையே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும்


விருதுநகர்–மதுரை இடையே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Jun 2017 3:45 AM IST (Updated: 4 Jun 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர்–மதுரை இடையே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பிற மாநிலங்களிலும் மருத்துவமனையை தொடங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். பிற மாநிலங்களில் இந்த மருத்துவமனை தொடங்குவதற்கான இடங்களை தேர்வு செய்து அந்த மாநில அரசுகள் பரிந்துரை செய்து விட்டதால் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் அந்த மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தாமதம்

ஆனால் தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம், எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவது என தமிழக அரசு முடிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது தான். இடத்தினை தேர்வு செய்ய மத்திய அரசு குழுவினர் மதுரை தோப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களையும் ஆய்வு செய்து விட்டு சென்று பல மாதங்கள் ஆகியும் தமிழக அரசு தனது முடிவினை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து சென்றுள்ளார். ஆனாலும் தமிழக அரசு பரிந்துரை செய்த பின்னர் தான் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

கோரிக்கை

ஏற்கனவே விருதுநகருக்கும் மதுரைக்கும் இடையே அமைந்துள்ள தோப்பூரில் மத்திய அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி தொடங்க நிதி ஒதுக்கீடு செய்த போது அந்த ஆஸ்பத்திரியை மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலேயே அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்துவிட்டது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் சிறப்பு சிகிச்சை பெறுவதற்கு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளை நாடவேண்டி உள்ளது. எனவே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால் தென்மாவட்ட மக்கள் பயன் அடைய வாய்ப்பு ஏற்படும். எனவே தமிழக அரசு மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையை தோப்பூரில் அமைக்க பரிந்துரை செய்வதோடு, இதற்கான நடவடிக்கைகளையும் விரைவு படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Next Story