மேகமலை வனப்பகுதியில் தூக்குப்போட்டு லாரி டிரைவர் தற்கொலை


மேகமலை வனப்பகுதியில் தூக்குப்போட்டு லாரி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Jun 2017 3:15 AM IST (Updated: 4 Jun 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

மேகமலை வனப்பகுதியில் தூக்குப்போட்டு லாரி டிரைவர் தற்கொலை மனைவியின் கள்ளத்தொடர்பு தெரிந்ததால் பரிதாபம்

சின்னமனூர்,

மனைவியின் கள்ளத் தொடர்பு தெரிந்ததால் மனம் உடைந்த லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

கள்ளத்தொடர்பு

கம்பம் சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் நமகோடி. இவருடைய மகன் நடராஜ் (வயது 30). லாரி டிரைவர். இவருக்கும் கூடலூரை சேர்ந்த ரஞ்சிதா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையொட்டி நடராஜ் தனது மனைவியுடன் சாமாண்டிபுரத்தில் தனியாக வசித்து வந்தார்.

இவர் லாரி டிரைவராக இருப்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். இந்த நிலையில் ரஞ்சிதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையொட்டி இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இவர்களுடைய கள்ளத்தொடர்பு நடராஜுக்கு தெரிய வந்தது. இதையொட்டி அவர் தனது மனைவி ரஞ்சிதாவை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து அந்த வாலிபருடன் பழகி வந்துள்ளார். தொடர்ந்து ரஞ்சிதாவை நடராஜ் கண்டித்ததால் அவர் கோபித்துக் கொண்டு கூடலூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவரை குடும்பம் நடத்த வருமாறு நடராஜ் அழைத்துள்ளார். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நடராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையொட்டி நேற்று மேகமலை பகுதியில் உள்ள ஒரு தேயிலை தொழிற்சாலைக்கு விறகு ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது சென்ரிகேம் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு சென்று மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

சென்ரிகேம் பகுதியில் லாரி நீண்ட நேரமாக நின்றதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஹைவேவிஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது காட்டுப்பகுதியில் நடராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

இதையொட்டி அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story