இந்திய அளவில் சுற்றுலாத்துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது அமைச்சர் பேச்சு


இந்திய அளவில் சுற்றுலாத்துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 4 Jun 2017 4:15 AM IST (Updated: 4 Jun 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் குமரி திருவிழா-2017 நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்திய அளவில் சுற்றுலாத்துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிப்பதாக கூறினார்.

கன்னியாகுமரி,

தமிழக சுற்றுலாத்துறை மற்றும் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரி திருவிழா-2017 கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 7-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது.

விழாவுக்கு குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கினார். விஜயகுமார் எம்.பி., முன்னிலைவகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசினார்.

தமிழகம் முதலிடம்

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் சுற்றுலாத்துறையில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சுற்றுலாத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அளவில் சுற்றுலாத்துறையில் தமிழக அரசு தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அமைந்த எடப்பாடி பழனிசாமி தலமையிலான ஆட்சியிலும் சுற்றுலாத்துறை சிறந்துவிளங்குகிறது. கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சுற்றுலா தலங்களில் ஆய்வு நடத்தி வருகிறேன். மேலும், அங்குவரும் சுற்றுலாபயணிகளையும் நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துக்களையும், குறைகளையும் கேட்டறிந்து வருகிறேன்.

வல்லுனர் குழு

கடந்த சில தினங்களுக்கு முன் நான் இங்கு வந்தபோது சுற்றுலாத்துறையின் மேம்பாட்டு பணிகள்குறித்து ஆய்வு நடத்தி சென்றேன். திருச்செந்தூரில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் திருமண மண்டபம் தேவை என்று கூறினார்கள். அதன்பேரில் அங்கு திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் நெல்லை மாவட்டம் குற்றலாத்தில் சீசனையொட்டி, தங்கும் விடுதிகள், உடைமாற்றும் அறை, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2012-13 ஆண்டில் திருவள்ளுவர் சிலை பராமரிக்கப்பட்டு ரசாயனக்கலவை பூசப்பட்டது. ரசாயனக்கலவை பூசப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும்பணி தொடங்கியுள்ளது. இந்த பணியை வல்லுனர் குழு அடிக்கடி பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

திருவள்ளுவர் சிலைக்கு மூன்று தடவை(கோட்டிங்காக) ரசாயனக்கலவை பூசப்படும். இந்தப்பணியை தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குனர் நேரில் வந்து ஆய்வு செய்வார். இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.24¼ கோடி...

முன்னதாக, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசும்போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்காக தமிழக அரசு ரூ. 24 கோடியே 37 லட்சம் ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டை விட, குமரி மாவட்டத்துக்கு இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தந்துள்ளனர். மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலங்களான வட்டக்கோட்டை, மாத்தூர் தொட்டிபாலம், திற்பரப்பு அருவி உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன் வரவேற்று பேசினார். முடிவில் சுற்றுலா வளர்ச்சிகழக மண்டலமேலாளர் சுகுமாரன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story