மதுக்கடையை முற்றுகையிட்டு 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்


மதுக்கடையை முற்றுகையிட்டு 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:30 AM IST (Updated: 4 Jun 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே மதுக்கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் 2-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையால் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே இந்த மதுக்கடையினை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி வாலிஓடை, எக்கல், கண்டகரையான், சோத்திரியம், மேலப்பனையூர், உக்கடை, கமலாபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த டாஸ்மாக் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மே மாதம் 31-ந் தேதிக்குள் இந்த மதுக்கடை அகற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்தனர்.

சமையல் செய்து சாப்பிட்டனர்

மேற்கண்ட மதுக்கடை அகற்றப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்றுமுன்தினம் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மதுக்கடை அருகே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தின்போது மதுக்கடை உடனடியாக அகற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கழனியப்பன் (மன்னார்குடி), சுப்பிர மணியன் (பரவாக்கோட்டை), தலையாமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story