இரட்டை கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை


இரட்டை கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 4 Jun 2017 3:45 AM IST (Updated: 4 Jun 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர். அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மலைக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் திருச்சனம்பூண்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது36). இவருடைய நண்பர் தஞ்சை பூண்டியை சேர்ந்த வின்சென்ட்(35). இவர்கள் கடந்த 1-ந் தேதி திருச்சியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர். நிகழ்ச்சியை முடித்து கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஓயாமரி சுடுகாடு ரோட்டில் சென்றபோது, காரில் வந்த மர்ம கும்பல் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தியபோது, கடந்த 2015-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் நடந்த ரவுடி பஞ்சாபிகேசன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த இரட்டை கொலை நடந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாராமன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

3 பேர் சிக்கினர்

இந்த கொலையில் ஈடுபட்டதாக பஞ்சாபிகேசன் மனைவி சுகந்தி, அவரது சகோதரர் கனகராஜ், குமார், சரவணன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையில், பஞ்சாபிகேசனின் மனைவி சுகந்தி திருச்சியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருவது தெரியவந்தது.

இதையடுத்து தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இந்தநிலையில் இந்த இரட்டை கொலையில் தொடர்புடைய 3 பேர் தனிப்படை போலீ சாரிடம் சிக்கினர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story