கட்சி பணியில் ஈடுபட போவதாக டி.டி.வி.தினகரன் கூறியதில் தவறு இல்லை


கட்சி பணியில் ஈடுபட போவதாக டி.டி.வி.தினகரன் கூறியதில் தவறு இல்லை
x
தினத்தந்தி 4 Jun 2017 4:30 AM IST (Updated: 4 Jun 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

கட்சி பணியில் ஈடுபட போவதாக டி.டி.வி.தினகரன் கூறியதில் தவறு இல்லை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

திண்டுக்கல்,

கட்சி பணியில் ஈடுபட போவதாக டி.டி.வி.தினகரன் கூறியதில் தவறு இல்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு, அளித்த பதில் விவரம் வருமாறு:–

தவறு இல்லை

கேள்வி:– டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தொடர்ந்து கட்சி பணியாற்ற போவதாகவும், தன்னை கட்சியில் இருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் கூறியிருக்கிறாரா?

பதில்:– அவர் சொல்வதில் 100 சதவீதம் உண்மை. அதில் ஒன்றும் தவறு இல்லை. அவரை யாரும் நீக்கவில்லை. அவரே தான் விலகி கொள்வதாக கூறினார். நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு தான் உரிமை உண்டு.

கேள்வி:– ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் இவ்வாறு கூறியிருப்பது மீண்டும் அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்தாதா?.

பதில்:– கட்சி பணியில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. கட்சி பணியை மேற்கொள்வது அவரவர் விருப்பம். அதில் தப்பு ஒன்றும் இல்லை.

ஜெயக்குமார் கருத்து

கேள்வி:– நிதி அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி.தினகரனை சந்திக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறாரா?

பதில்:– நிதிஅமைச்சர் சொன்னது அவருடைய கருத்து. கட்சி பணியை மேற்கொள்வதாக கூறுவது அவருடைய கருத்து. முடியாது என நான் கூற வேண்டுமா?.

கேள்வி:– அ.தி.மு.க.வில் ஒருசிலர் ஆதரவு தெரிவிக்கவில்லையே?.

பதில்:– எந்த குழப்பமும் இல்லை. அவர் இப்போது தான் வந்துள்ளார். இனி தானே எல்லாம் தெரியும்.

கேள்வி:– வனப்பகுதியில் அகழிகள் வெட்டப்பட்டாலும், யானைகள் தொடர்ந்து வெளியே வந்த வண்ணம் இருக்கிறதே?

பதில்:– வறட்சியால் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் யானைகள் வருகின்றன. மேலும் தற்போது வெளியே வந்த யானை மதம் பிடித்த ஆண் யானை. அதை பிடித்து காட்டுக்குள் விடப்பட்டுள்ளது. நேற்று வந்த வழியாக இதுவரை யானை வந்தது இல்லை என கூறுகின்றனர். மேலும் காட்டில் இருந்து யானைகள் வெளியே வராமல் இருக்க அகழிகள் வெட்டி, வேலி அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

யானைகள் உயிரிழப்பு

கேள்வி:– யானைகள் உயிரிழப்பு அதிகமாக உள்ளதே?

பதில்:– யானை மட்டுமின்றி எந்த விலங்கும் உயிரிழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:– தனியார் ஆக்கிரமிப்பால் பாதை மறிக்கப்பட்டு யானைகள் வருவதாக கூறப்படுகிறதே?

பதில்:– யானைகள் வழிதவறி ஊருக்குள் வந்து விடுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story