சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சகித்து கொள்ள முடியாது


சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சகித்து கொள்ள முடியாது
x
தினத்தந்தி 4 Jun 2017 4:29 AM IST (Updated: 4 Jun 2017 4:29 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சகித்து கொள்ள முடியாது என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சகித்து கொள்ள முடியாது என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.

கே.ஜே.ஜார்ஜ் நலம் விசாரித்தார்

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 5 வயது சிறுமி மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அந்த சிறுமியின் கை விரல் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அவளது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பவுரிங் ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பவுரிங் ஆஸ்பத்திரிக்கு நேற்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் சென்று, சிறுமியின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார். மேலும் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களுக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் உத்தரவிட்டார்.

பின்னர் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

சகித்து கொள்ள முடியாது

பெங்களூருவில் 5 வயது சிறுமியை மர்மநபர்கள் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுதொடர்பாக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து பெங்களூரு போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட்டிடம் பேசினேன். இதில் தொடர்புடைய மர்மநபரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். சிறுமிகள், பெண்கள் மீது நடைபெறும் பாலியல் கொடுமைகளை சகித்து கொள்ள முடியாது. அந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுமி, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டு தொடங்கப்பட்டு உள்ளது. அந்த தனிக்கோர்ட்டு மூலம் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும். இதற்கு தேவையான சாட்சி, ஆதாரங்களை போலீசார் திரட்டி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். சிறுமிகள், பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும், அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கவும் போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.


Next Story