கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது


கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
x
தினத்தந்தி 4 Jun 2017 4:30 AM IST (Updated: 4 Jun 2017 4:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு விதானசவுதாவில் கூடுகிறது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு விதானசவுதாவில் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி பிரச்சினையை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

சட்டசபை நாளை கூடுகிறது

பெங்களூருவில் கடந்த மாதம் (மே) 17–ந் தேதி முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரை ஜூன் 5–ந் தேதி (அதாவது நாளை) கூட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு விதானசவுதாவில் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 16–ந் தேதி வரை நடைபெற உள்ளது. விடுமுறை நாட்களை தவிர்த்து 10 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு ஜூலை மாதம் 1–ந் தேதியில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. அதற்கு முன்பாக கர்நாடகத்தில் சரக்கு மற்றும் சேவை வரிக்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய உள்ளது. அதனால் சரக்கு மற்றும் சேவை வரிக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது.

பயிர்கடன் தள்ளுபடி பிரச்சினையை...

ஏற்கனவே கர்நாடகத்தில் வறட்சி நிலவுவதால் விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பா.ஜனதா, ஜனதாளதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் மாநில அரசை வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் பயிர்கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 4 லட்சம் விவசாயிகளை ஒன்று திரட்டி விதானசவுதாவை முற்றுகையிட போவதாக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதனால் இந்த கூட்டத்தொடரில் விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பிரச்சினையை எழுப்ப பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

கர்நாடகத்தில் உணவு மற்றும் வினியோகத்துறையில் நடந்த ஊழல் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் தான், ஐ.ஏ.எஸ். அதிகாரி அனுராக் திவாரி உத்தரபிரதேச மாநிலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக, அவரது சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பிரச்சினையையும் சட்டசபை கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதுதவிர கர்நாடகம் சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு, பெங்களூரு புறநகரில் பா.ஜனதா பிரமுகர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டதையும் எழுப்ப பா.ஜனதாவினர் தீர்மானித்துள்ளனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினையை சமாளிக்க முதல்–மந்திரி சித்தராமையாவும், மந்திரிகளும் தயாராகி வருகிறார்கள்.

144 தடை உத்தரவு

நாளை முதல் வருகிற 16–ந் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், பெங்களூரு விதானசவுதாவை சுற்றி 2 கிலோ மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் விதானசவுதாவை சுற்றி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்றும் போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.


Next Story