மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இலவச சீருடைகள் அனுப்பும் பணி தீவிரம்
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இலவச சீருடைகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர்,
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 7–ந்தேதி (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கும் அன்றே மாணவ–மாணவிகளுக்கு தேவையான பாட புத்தகங்கள், நோட்டுகள், இலவச சீருடைகள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகம் பாட புத்தகங்கள், நோட்டுகளை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அதன்படி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு பாட புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த பாட புத்தகங்களை லாரிகள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இலவச சீருடைஅதேபோல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் மூலம் 1 முதல் 8–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக 2 ‘செட்’ இலவச சீருடைகள் அனுப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூட்டுறவு தையல் கலைஞர்கள் தைத்து அனுப்பிய சீருடைகளை லாரிகள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பும் பணியில் தொடக்க கல்வி அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது பற்றி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இளங்கோ கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,424 அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1 லட்சத்து 12 ஆயிரத்து 199 மாணவ– மாணவிகளில் சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கும் அன்றே இலவச சீருடைகள், நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படும் என்றார்.