மதுப்பழக்கம் உயிரை பறித்தது கணவன் – மனைவி தீக்குளித்து தற்கொலை


மதுப்பழக்கம் உயிரை பறித்தது கணவன் – மனைவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 Jun 2017 5:28 AM IST (Updated: 4 Jun 2017 5:28 AM IST)
t-max-icont-min-icon

கணவனின் மது பழக்கத்தை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

செய்யாறு,

கணவனின் மது பழக்கத்தை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதனை பார்த்த கணவனும் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செய்யாறு அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கட்டிட தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது 35), கட்டிட தொழிலாளி. இவருக்கு சங்கீதா (31) என்ற மனைவியும், சாந்தினி (7), ஜமுனாதேவி (5), அஸ்வதி (3) ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

கட்டிட தொழிலில் சென்ட்ரிங் வேலை பார்க்கும் ரஜினிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நாளடைவில் மதுவுக்கு அவர் அடிமையாகி விட்டார். வேலையில் கிடைக்கும் வருமானத்தில் மது வாங்கி குடிப்பதற்கே அவர் அதிகமாக செலவிட்டதால் குடும்ப செலவுகளுக்கு போதிய பணத்தை கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தீக்குளித்து கணவன்–மனைவி பலி

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரஜினி மது குடித்து விட்டு வந்ததால் கணவன்– மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. விரக்தி அடைந்த சங்கீதா வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்து திடீரென தன்மீது மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொள்ள முயன்றார். அப்போது, கணவன் ரஜினியும் தன் மீது மண்எண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டதாக தெரிகிறது.

தீயில் கருகிய 2 பேரும் அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் கணவன்–மனைவி 2 பேரையும் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்–தந்தை இறந்து விட்டதால் 3 குழந்தைகளும் நிர்கதியாய் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



Next Story