வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர மாணவ– மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர மாணவ– மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 4 Jun 2017 5:34 AM IST (Updated: 4 Jun 2017 5:34 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர மாணவ– மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அரசு விடுதிகள்

வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கென 33 பள்ளி விடுதிகளும், 11 கல்லூரி விடுதிகளும் என மொத்தம் 44 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில் 4 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ– மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ– மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

அனைத்து விடுதி மாணவ–மாணவிகளுக்கு எவ்வித செலவும் இல்லாமல் உணவு, தங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் எஸ்.எஸ்.எல்.சி. வரை பயிலும் மாணவ– மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மற்றும் பிளஸ்–2 வகுப்பு பயிலும் மாணவ– மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படுகின்றன.

தகுதிகள்

பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ– மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

வருகிற 20–ந் தேதிக்குள்...

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20–ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை விடுதி காப்பாளரிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது சாதி, பெற்றோரது வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ் அளித்தால் போதுமானது. இச்சலுகைகளை பயன்படுத்தி மாணவ– மாணவிகள் பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story