திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,900 ஏரிகளில் மண் எடுக்க அனுமதி கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,900 ஏரிகளில் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,900 ஏரிகளில் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
கோவில்குளம் தூர்வாரும் பணிதிருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அடிஅண்ணாமலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வருணலிங்கம் கோவில் குளத்தை துர்வாரி மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் வருணலிங்கம் கோவில் குளத்தை தூர்வாரி மேம்படுத்தும் பணி நேற்று நடந்தது. இப்பணியை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுடன் இணைந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். சுமார் 2 மணி நேரம் மண்வெட்டுதல், மண்ணை அள்ளி குளத்தின் வெளிப்பகுதியில் கொட்டுதல் போன்ற பணிகளை கலெக்டர் செய்தார்.
அதன்பின்னர் கலெக்டர், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களிடம் அப்பகுதியில் காணப்படும் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
1,900 ஏரிகள்முன்னதாக கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 18 ஏரிகள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.75 லட்சமும், விவசாயக்குழுக்கள் மூலம் ரூ.25 லட்சமும் என ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி ஏரி, குளங்களில் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நமது மாவட்டத்தில் 1,900 ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் கலெக்டரிடம் தான் மனு கொடுத்து அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. உங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், வேளாண்துறை அலுவலரிடம் மனு கொடுத்து அனுமதி பெற்று மண் எடுத்து கொள்ளலாம். ஏரிகளில் இருந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் டிராக்டர், லாரிகளில் மண் அள்ளி கொட்டுவதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.105 மட்டுமே பெறப்படுகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மழைநீரை சேமிக்க...பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் மழைநீரை சேமிக்க சிறிய அளவிலான தடுப்பணைகளை கட்டலாம். மழைநீரை சேமித்தால் தண்ணீர் தட்டுப்பாடு வராது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் குளம் தூர்வாரும் பணியில் கலெக்டருடன் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் புருஷோத்தமன், அமாவாசை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இனியவன், உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன், ஊராட்சி செயலாளர் முருகன், ஒன்றிய பொறியாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.