ஆண்களின் கண்களை கவனியுங்கள் பெண்களே..


ஆண்களின் கண்களை கவனியுங்கள் பெண்களே..
x
தினத்தந்தி 4 Jun 2017 11:56 AM IST (Updated: 4 Jun 2017 11:55 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் வீட்டிலேயே இருந்து குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்ட காலம் மாறிவிட்டது.

பெண்கள் வீட்டிலேயே இருந்து குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்ட காலம் மாறிவிட்டது. இன்று பெரும்பாலான குடும்பங் களில் தங்கள் பொருளாதார நிலையைச் சமாளிக்க, தேவைகளை சீராக நிறைவேற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. அதனால் படித்து முடித்த உடனே பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்க முன்வருகிறார்கள். வேலைக்கு செல்லும் இடத்தில் அவர் களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும்? அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும்? என்பதை பார்ப்போம்!

சவால்கள் சக்தியாய்:

வேலைக்கு செல்லும் பெண்கள் அதன் மூலம் பணத்தை மட்டும் ஈட்டுவதில்லை. வாழ்க்கையை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றலையும் அங்கிருந்து பெறுகிறார்கள். அவர்கள் உலக அனுபவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதனால் குடும்பத்தில் ஏற்படும் சிற்சில பிரச்சினைகளை சமாளிக்கும் திறமையை பெறுவதோடு மட்டுமில்லாமல், தங்களது அன்றாட வாழ்க்கையைப் பற்றி நன்றாக திட்டமிடவும் கற்றுக் கொள்கின்றார்கள்.

காலை முதல் இரவு வரை ஒவ்வொரு வேலையையும் நன்கு திட்டமிட்டு அந்தந்த நேரத்தில் செய்து முடிக்கவேண்டும் என்று நிறைய சிந்தித்து, சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்திற்கு வேலைகளை முடிக்க குறிப்பிட்ட நேரத்தில்- குறிப்பிட்ட இடத்திலிருந்து செல்லுதல், செல்லும் வழியில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியை கண்டுபிடிக்கும் ஆற்றலும் அவர்களிடம் வளர்கிறது. பயணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்தல், பயணங்களில் ஏற்படும் உடல்-உள்ளம் சார்ந்த பிரச்சினைகளை கையாளுதல், பாலியல் தொந்தரவுகளை சமாளித்தல் போன்ற ஆற்றலையும் பெறுகிறார்கள். நெருக்கடியான நேரத்திலும் தகவல் தொடர்புகளை சரிவர கையாளும் திறனையும் பெறுகிறார்கள்.

பணிபுரியும் இடத்தில் குழுவாக உழைத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்லுதல் போன்றவைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். பணியிடங்களுக்கு வருகைதரும் பொது மக்களிடம் இன்முகத்துடன் பழகவும் கற்றுக்கொள்கிறார்கள். பல தரப்பட்ட சக பணியாளர்களோடு பழகும் திறனையும் மேம்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆனாலும் பணி இடத்தில் ஆண்களிடையே நட்பு ஏற்படும் பொழுது விவேகத்துடன் நடந்து கொள்ளும் திறன் இன்னும் போதுமானதாக இல்லை. புணிபுரியும் இடங்களில் முதலாளி, உயர் அதிகாரி சமபொறுப்பில் உள்ளவர்களுடனும், தனக்கு கீழ் பணியாற்றுகிறவர் களுடனும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற பக்குவமும் வேலைபார்க்கும் பெண்களுக்கு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அதற்கு பெண்கள் தங்களை பல வழிகளில் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

வலிகளை வழிகளாக்குவோம்:

பெண்கள் வேலைக்குச் சென்றால்தான் அவர் களுக்கு சுதந்திரம் கிடைக்கும், உலக அனுபவம் கிடைக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும்- முன்பு இருந்த சுதந்திரம் வேலைக்குச் செல்வதால் பறிக்கப்பட்டுவிட்டதாக புலம்பும் பெண்களும் உண்டு.

புதிதாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்:

* அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும்போது, பஸ் ஏற காத்திருக்கும்போது, பஸ்- ரெயில்களில் பயணம் செய்யும்போது மனோரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்படும். அத்தகைய தொல்லைகளுக்கு உள்ளாகும்போது தைரியமாக எதிர்க்கும் திறனை பெறவேண்டும். போலீசில் புகார் கொடுக்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். எதிர்க்க தைரியமில்லாதபோது தொந்தரவு கொடுக்கும் நபர்களின் காதில் விழுவது போல் பெரிய அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டு தமக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று கூறி தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தையும் கையாளலாம் .

எல்லைகளை வரையறுப்போம்:

இன்றைய சூழலில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டுமெனில் அவர் களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பழக்கத்தின் எல்லை எது வரை இருக்கலாம்? என்பதை பெண்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

* அலுவலகம் என்பது அனுபவித்தே ஆக வேண்டிய ஆயுட்கால சிறைச்சாலை அல்ல. மகிழ்ச்சியோடு ஒன்றிணைந்து ரசனையுடன் விரும்பி பணிபுரியும் அற்புதமான பூங்கா. அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே தவிர தனிப்பட்ட விருப்பங்களுக்கும், குடும்ப பிரச் சினைகளுக்குமான இடம் அல்ல என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.

* பழகக்கூடிய ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மன முதிர்ச்சி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்வதை தவிர்க்கவேண்டும், பொதுவாக ஆண்கள் பெண்களை கவர அன்பாக, மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வதுபோல் பேசுவார்கள். தன்னிடம் அன்பாக பேசக் கூடியவர்கள் எல்லோருமே தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றப் போகிறவர்கள் என்ற எண்ணம் பெண்களிடம் ஏற்பட்டுவிடக்கூடாது. ஆண் எந்த நோக்கத்திற்காக நம்மிடம் பேசுகிறார் என்பதை அவரது வார்த்தைகளில் இருந்தும், கண்களிலும் இருந்தும் நம்மால் தெரிந்துகொள்ள இயலும். அதைப்பொறுத்து அவருடனான உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள பெண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

* நம் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறுவதையும் தவிர்க்க வேண்டும். நம்முடைய இரக்க குணத்தை சாதகமாக எடுத்துக் கொள்ளும் ஆண்களில் சிலர் தங்கள் மனைவியை பற்றி நம்மிடம் குறைத்துப்பேசுவார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. ஏன்என்றால் அது நம்மை ஏமாற்ற செய்த தந்திரம் என்பது பிற்காலத்தில்தான் தெரியவரும்.

* பிறர் கண்களை உறுத்தும் வண்ணம் உடையணிவதை தவிர்க்க வேண்டும். உயர் அதிகாரிகள் தொல்லைகள் தரும் பட்சத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக் காமல் பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாண்டு, நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.

* முக்கியமாக உடல்ரீதியான ஈர்ப்புகளுக்கு ஆளானால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிஜமாகவே விபரீதமாக இருக்கும். இதனால் நம் பெயர் கெடுவது மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி நம் அருமையான குடும்ப வாழ்க்கையையும் இழக்கும் சூழ்நிலை உருவாகும்.

பெண்களால் பெண்களுக்கு..

பெண்களால் பெண்களுக்கே பிரச்சினைகள் வரும். சில பெண்கள் அதிக சலுகைகள் பெற உயர்அதிகாரிகளிடம் நெருங்கிய பழக்கம் வைத்துக் கொள்வார்கள். அதே அலுவலகத்தில் நேர்மையாக யாருக்கும் அடிபணியாமல் தன் கடமையில் கண்ணும் கருத்துமாக பணி புரியும் பெண்ணும் வேலைபார்ப்பார். நிறுவனத்தை நேசிக்கும் அந்த பெண்ணிற்கும்- அதிகாரிகளிடம் நெருங்கிய பழக்கம் வைத்துக்கொள்ளும் பெண்ணிற்கும் கண்டிப்பாக ஒத்துப் போகாது. கடமையை ஒழுங்காக செய்யும் பெண்ணை நிர்வாகம் இழக்க விரும்பாது என்றாலும், நெருங்கிப் பழகும் பெண்ணை திருப்திப்படுத்தவும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். அதனால் உண்மை உழைப்பாளி சில அவமானங்களை சந்திக்க நேரலாம். இப்படிப்பட்ட நேரங்களில் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் அதை விட நல்ல வேலையை தேடிக்கொண்டு நல்ல முறையில் அந்த நிறுவனத்திலிருந்து விலகி கொள்வது நலம்.

பெண்ணே, அடிபடாமல் பாடங்கள் இல்லை. அடிபடும்போது அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவேண்டும். இந்த நவீன யுகத்தில் ஆண்-பெண் நட்பில் ஒரு நபரிடம் ஏமாந்து விட்டோம் என்றால் அதிலிருந்து விடுபட இன்னொரு நபரிடம் நட்பு என்று அடிமையாகாமல் பணிகள் பக்கம் கவனத்தை திருப்பி நம் பணிகளை நேசித்து விடாமுயற்சியோடு உழைக்கவேண்டும். அப்போது உயர் பதவிகள் தானே தேடிவரும். அதுபோல் நட்புகளையும் தேடிச்செல்லவேண்டாம். நல்ல நட்புகள் நம்மைத் தேடிவரும்.

நாம் வாழ்வது உயிர்ப்புடன் கூடிய வாழ்க்கை. உயிரற்ற இயந்திரத்தனமான வாழ்க்கை அல்ல. இயந்திரத்தனமாக வாழ்பவர்கள் அதிலேயே மூழ்கடிக்கப்பட்டு சந்தோஷமற்ற முகங்களுடன் வளைய வருவதை நாம் பார்க்கலாம். வாழ்க்கையை அந்தந்தத் தருணத்துக்கு ஏற்றபடி உணர்வுப்பூர்வமாக, முழுமையான விழிப்புணர்வுடன் ரசனையுடன் நேசித்து வாழத் தொடங்குவோம். உணர்வோம், அர்த்தமுள்ள வாழ்க்கையை!!

Next Story