தாயான பின்பு வேலைக்கு சென்றால்...


தாயான பின்பு வேலைக்கு சென்றால்...
x
தினத்தந்தி 4 Jun 2017 12:23 PM IST (Updated: 4 Jun 2017 12:23 PM IST)
t-max-icont-min-icon

வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பெண்கள் குழந்தை பிறந்ததும் வேலைக்கு தற்காலிக முழுக்கு போட்டு விடுவார்கள்.

வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பெண்கள் குழந்தை பிறந்ததும் வேலைக்கு தற்காலிக முழுக்கு போட்டு விடுவார்கள். குழந்தை ஓரளவு வளர்ந்த பிறகு வேலைக்கு செல்ல முனைப்பு காட்டுவார்கள். ஆனால் அதிக இடைவெளி விட்டு, குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல தொடங்கிய பிறகு வேலைக்கு போக நினைக்கும் பெண்களிடம் ஒருவித தயக்கம் எட்டிப்பார்க்கும். ஏற்கனவே பார்த்து வந்த வேலையில் மீண்டும் திறமையுடன் செயல்பட முடியுமா? நீண்ட இடைவெளியால் வேலையில் முழு கவனத்தை பதிக்க முடியுமா? சக ஊழியர்களை விட வேலையில் பின்தங்கி விடுவோமோ? அலுவலக சூழலுக்கு ஏற்ப ஈடுகொடுத்து செயல்பட முடியுமா? வேலைக்கு சென்ற பிறகு குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிட முடியுமா? என பலவித கவலைகள் மனதில் நிழலாடும்.

* குழந்தைகளுடனும், குடும்பத்தினருடனும் அதிக நேரத்தை செலவிட்டு பழகிவிட்டதால் அவர்களின் அருகாமை இல்லாதது கவலையை ஏற்படுத்தும். அது இயல் பானதுதான். அதிலிருந்து மீண்டு வேலைக்குள் முழு கவனத்தை பதிக்க பழகிக்கொள்ள வேண்டும்.

* குழந்தைகளையும், அலுவலக வேலைகளையும் சமாளிப்பது ஒருசிலருக்கு கடினமாக தோன்றும். இரண்டுக்கும் திட்ட மிட்டு நேரம் ஒதுக்கி செயல்பட்டாலும் சிரமங்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது. பயமும், கவலையும் நீங்கி தெளிந்த நிலையில் செயல்பட்டால் நேர மேலாண்மைக்கு மனதை பக்குவப்படுத்திக்கொள்ளலாம்.

* குழந்தைகளின் கூடவே இருந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்த மன நிறைவு வேலைக்கு சேர்ந்த பிறகு கிடைக்காமல் போகும். குழந்தை சரியான நேரத்திற்கு சாப்பிட்டதா? அதற்கு தேவையானதை எல்லாம் வீட்டில் இருப்பவர்கள் கொடுத்தார்களா? என்ற கவலை வாட்டும். அந்த கவலையை போக்க குழந்தை தன் தேவைகளை தானே செய்து கொள்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும்.

* வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது மனதில் குழந்தைகள், குடும்பத்தை பற்றிய எண்ண ஓட்டங்களோ, எதிர்மறை சிந்தனைகளோ எழக்கூடாது. அது உங்கள் நேரத்தையும், உழைப்பையும் வீணாக்கி விடும்.

* குழந்தை பிறந்த பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் நிலையான வேலை, நிரந்தர வருமானம் பற்றிய கவலை குடிகொள்ளும். அதற்காக அலுவலகத்தில் யாரிடமும் தேவையற்ற இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. எப்போதும் போல இயல்பாக நடந்து கொள்ள பழகுங்கள். உங்கள் வேலையை திறம்பட செய்து முடியுங்கள். சலுகைகளை எதிர்பார்க்காதீர்கள். அது சக ஊழியர்கள் மத்தியில் மனக்கசப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் ஏற்படுத்திவிடக்கூடும்.

* ஒருபோதும் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கு இடம்கொடுக்கக்கூடாது. பொதுவாகவே இல்லத்தரசிகள் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட வீட்டு வேலைகளை திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். வீட்டு வேலைகளை போலவே அலுவலக வேலைகளையும் அவர்களால் சமாளிக்க முடியும். உங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வையுங்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

* அலுவலக வேலையில் சேருவதற்கு முன்பு குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு இருப்பீர்கள். நடை பயிற்சி மேற்கொள்வது, பிடித்த உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவது, பாடல்களை கேட்டு ரசிப்பது, புத்தகங்கள் படிப்பது என பிடித்தமானவைகளை செய்து வந்திருப்பீர்கள். அவைகளை நிறுத்திவிட வேண்டியதில்லை. அவற்றுக்கும் நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுடன் இருந்தபோது எத்தகைய மனநிலையில் இருந்தீர்களோ அது தொடரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

* வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பிறகு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதற்கு காண்பிக்கும் அக்கறையை குடும்ப உறுப்பினர்களிடமும் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும், உங்களுக்கும் இடையே உறவு சுமுகமாக நீடிக்கும். அப்படி செய்தால்தான் நீங்கள் இல்லாதபோது உங்கள் குழந்தைகளை அவர்கள் நன்றாக கவனித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.

* வேலைக்கு செல்ல தொடங்கிய பிறகு உறவினர்கள், நண்பர்களிடமும் சுமுக உறவை பேண வேண்டும். வார இறுதி நாட்களிலாவது நட்புரீதியிலான தொடர்பில் இருக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் பேசினால் கூட அவர்கள் மனமகிழ்ச்சி அடைவார்கள். உறவையும் வலுப்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

* ஒருசிலருக்கு ஏற்கனவே பார்த்து வந்த பணியை தொடர முடியாத சூழல் ஏற்படும். வேறு துறையில் வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதனை திறமைகளை மெருகேற்றிக்கொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பாக கருத வேண்டும். மனதை திடப்படுத்திக்கொண்டு தன்னம்பிக்கையுடன் களம் இறங்க வேண்டும்.

* அலுவலக விஷயங்களை வீட்டில் அசைபோட்டு மனதை குழப்பிக்கொள்ளக்கூடாது. அது தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்துவிடும். வேலையையும், வீட்டையும் சரிசமமாக நிர்வகிக்க பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். 

Next Story