ஒட்டுமொத்த திரைத்துறைக்கே பாதிப்பு: ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும்
ஒட்டுமொத்த திரைத்துறைக்கே பாதிப்பு: ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் கோவையில் இயக்குனர் சமுத்திரகனி பேட்டி
கோவை,
ஒட்டுமொத்த திரைத்துறைக்கே பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இயக்குனர் சமுத்திரகனி கூறினார்.
சமுத்திரகனி பேட்டிதொண்டன் திரைப்படத்தை இயக்கி நடித்தவர் சமுத்திரகனி. நேற்று கோவை வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தொண்டன் சினிமா படக்கதை அன்றாடம் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான். 108 ஆம்புலன்சில் பணிபுரிபவர்களை பற்றிய கதை. அதில் பணியாற்றும் இளைஞர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்தினால் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
திரைப்படங்கள் மூலம் தனி மனிதனின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட படங்களை தான் நான் இயக்குகிறேன். ஒரு வீட்டில் 10 பேர் இருந்தால் அவர்கள் அனைவரும் கையில் செல்போனை வைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் நிலை தற்போது உள்ளது. மனிதர்களின் எண்ணம் சிறியதாகி விட்டது. அந்த நிலை மாற வேண்டும்.
அதற்காக தான் நான் எதார்த்தமாக நடக்கும் சம்பவங்களை வைத்து படம் இயக்குகிறேன். அப்பா படத்தை போன்று தொண்டன் படமும் அப்படி தான் அமைந்துள்ளது. தொண்டன் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தை இயக்குவதில் விருப்பம்எனக்கு நடிப்பை விட படத்தை இயக்குவது தான் விருப்பம். ஏனென்றால் மற்றவர்களின் விருப்பத் துக்கு ஏற்ப நாம் நடிக்க வேண்டும். ஆனால் இயக்குனர் என்றால் நமது விருப்பத்திற்கேற்ப செயல்பட முடியும். திரைப்பட இயக்குனர்கள் நடிகர்களை விட சிறந்த நடிகர்கள், ஒரு படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் எப்படி இருக்க வேண்டும். எப்படி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் தனது மனதில் நடித்து பார்த்துக் கொள்வார். எனவே இயக்குனரே சிறந்த நடிகர்.
என் சொந்த ஊரில் சிறிய வயதில் முறுக்கு விற்று அந்த பணத்தில் ரஜினி படம் பார்ப்பேன். அதன்பின்னர் எங்கள் ஊர் தியேட்டரில் ஆபரேட்டராக வேலை செய்த போது ரஜினிகாந்த் படங்களாக போடுவோம். அவருடன் காலா படத்தில் நடிப்பதை நினைக்கும் போது நான் பட்ட கஷ்டம் வீண் போக வில்லை என்று தெரிகிறது. ரஜினிகாந்த் அரசியலில் வருவது அவரது விருப்பம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வது மக்களின் விருப்பம். எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை.
ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்புஅடுத்து வடசென்னை, வேலையில்லா பட்டதாரி–2 ஆகிய படங்களில் நடிக்கிறேன். விவசாயிகளின் பிரச்சினையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளேன். அதற்கான கதை ஆய்வு நடந்து கொண்டி ருக்கிறது. சூதாட்டமும், சினிமாவும் ஒன்று என்று ஜி.எஸ்.டி. வரி விதித்திருக்கிறார்கள். அதை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்திருக்கிறார். அவரை தொடர்ந்து ஒட்டு மொத்த படஉலகமே குரல் கொடுக்கும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் திரைப்படத்துறையில் உள்ள அனைவருமே பாதிக்கப்படுவார்கள். எனவே அதில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
கல்வி துறையில் மாற்றங்களை கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் தேர்வு என்ற பெயரில் மாணவர்களின் மனதில் பயத்தை உருவாக்கி விடக்கூடாது. படிப்பு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்ற வகையில் தான் கல்வி இருக்க வேண்டும்.
இவ்வாறு சமுத்திரகனி கூறினார்.
அப்போது தொண்டன் பட தயாரிப்பாளர் மணிகண்டன், நடிகர் விக்ராந்த், கந்தசாமி ஆர்ட் சென்டர் மேலாளர் ஹரிஸ், ஆர்ட் பேக்டரி முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.