கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.100–ஐ தாண்டியது உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி


கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.100–ஐ தாண்டியது உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 5 Jun 2017 3:45 AM IST (Updated: 5 Jun 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.100–ஐ தாண்டியது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பொள்ளாச்சி,

தமிழகத்தில் பல்லடம், உடுமலை, பொங்கலூர், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.இப்பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை கொண்ட 8 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வேன்கள், லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழக கடலோரப்பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் 15–ந் தேதி முதல் 60 நாட்கள் வரை விசைப்படகுகள் மூலம் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடல் மீன்களின் வரத்து குறைந்துள்ளன.

கறிக்கோழி நுகர்வு அதிகரிப்பு

வரத்து குறைவால் வழக்கத்தை விட மீன்களின் விலை சராசரியாக 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை விலை உயர்ந்து உள்ளன. மேலும், ஆட்டு இறைச்சியின் விலை உயர்வு காரணமாக மீன் பிரியர்களின் பார்வை தற்போது குறைந்த விலையில் கிடைக்கும் கறிக்கோழிகள் மீது திரும்பியுள்ளது.

இதன் காரணமாக கடந்த பல வாரங்களாக கறிக்கோழி நுகர்வு வழக்கத்தைதை விட அதிகரித்து உள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளாவில் கறிக்கோழி நுகர்வு அதிகரித்ததை தொடர்ந்து பண்ணைக் கொள்முதல் விலையையும் பல்லடத்தில் செயல்பட்டு வரும் கறிக்கோழி ஒருங்கினைப்பு குழு (பி.சி.சி) உயர்த்தி வருகிறது.

ரூ.100–ஐ தாண்டியது

கடந்த 10–ந் தேதி ரூ,80 ஆக இருந்த பண்ணை கொள்முதல் விலை 21–ந் தேதி ரூ.93, 22–ந் தேதி ரூ.97 என தொடர்ந்து கிலோவிற்கு ரூ.2, ரூ.3 என உயர்ந்து கடந்த சில நாட்களாக கிலோ ரூ.103ஆக பண்ணைக்கொள்முதல் விலை நீடித்து வருகிறது. ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.70 செலவாகிறது. கறிக்கோழி உற்பத்தி தொழிலில் தொடர்ந்து பல முறை நஷ்டத்தை சந்தித்து வந்த கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு, தற்போதைய கொள்முதல் விலை கிலோவிற்கு குறைந்தபட்சம் ரூ.30 லாபம் ஈட்டி தருவதால் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பண்ணைக் கொள்முதல் விலை தொடர்ந்து ரூ.100–ஐ தாண்டி நீட்டித்து வருவதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தடை நீங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. தடை நீங்கிய பின்பு கறிக்கோழி பண்ணைக்கொள்முதல் விலை சற்று குறையலாம் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். விலை சரிந்தாலும் கட்டுபடியானதாக இருக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story