பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது ஊட்டி– கூடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கோவையில் இருந்து பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது ஊட்டி– கூடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்,
கோவையில் இருந்து பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஊட்டி– கூடலூர் சாலையில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டேங்கர் லாரி கவிழ்ந்ததுகோவையை அடுத்த இருகூர் பகுதியில் இருந்து ஒரு டேங்கர் லாரி பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிக்கொண்டு நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு புறப்பட்டது. அந்த லாரி கூடலூர் அருகே எருமாடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தது.
லாரியின் ஒரு பகுதியில் 8 ஆயிரம் லிட்டர் பெட்ரோலும், மற்றொரு பகுதியில் 4 ஆயிரம் லிட்டர் டீசலும் இருந்தது. லாரியை பிரகாஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் அதிகாலை 5.30 மணி அளவில் அந்த லாரி ஊட்டி– கூடலூர் சாலையில் 27–வது வளைவில் சென்றது. அப்போது திடீர் என்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி லாரி கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் அந்த பகுதியில் அதிகளவில் வாகனங்கள் எதுவும் வரவில்லை.
இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி தப்பினார். லாரி கவிழ்ந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அப்போது டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் வெளியேறி கொண்டு இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் வாளி, கேன்களில் போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர்.
போக்குவரத்து பாதிப்புஅதற்குள் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கூடலூர் போலீசார் விரைந்து வந்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். மேலும் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் விரைந்து வந்து டேங்கர் லாரியில் தீ விபத்து ஏற்படாதபடி பாதுகாத்தனர்.
பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்ததால் ஊட்டி– கூடலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த சுற்றுலா வாகனங்கள் சாலையின் இருபுறமும் காத்து நின்றன. போலீசார் விரைந்து போக்குவரத்தை சரி செய்தனர். டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து கிடந்ததால் உடனடியாக போக்குவரத்து சீரானது.