செண்பகத்தோப்பு பேயனாற்று பகுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு


செண்பகத்தோப்பு பேயனாற்று பகுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 5 Jun 2017 4:00 AM IST (Updated: 5 Jun 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

செண்பகத்தோப்பு பேயனாற்று பகுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு: ஸ்ரீவில்லிபுத்தூரில் சீரான குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வினியோகத்துக்கு ஏற்பாடு செய்யும் வகையில் செண்பகத்தோப்பு பேயனாற்று பகுதியில் சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

எம்.எல்.ஏ. ஆய்வு

கடுமையான வறட்சியை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு பேயனாற்று பகுதியில் இயங்கி வரும் நகராட்சி தண்ணீர் ஏற்றும் நிலையம், அங்குள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை சந்திர பிரபா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக அவர் செண்பகத்தோப்பிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் முக்கிய நீராதாரமான திருமுக்குளத்திற்கு நீர் வரும் வழித்தடங்களை ஆய்வு செய்தார். அந்த பகுதியில் நகராட்சி சார்பில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அகற்ற உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேயனாற்று படுகையில் நீர்வரத்து பகுதிகளில் நீர் வரத்திற்கு தடையாக உள்ள மரம், செடி, கொடிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

சந்திரபிரபா எம்.எல்.ஏ.யுடன் நகராட்சி ஆணையாளர் முகமது மைதீன், பொறியாளர் ராமலிங்கம், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் முத்தையா, நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியம், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் திருப்பதி, கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சந்தானமூர்த்தி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

Next Story